சனி, டிசம்பர் 31

காற்றுவெளி ஜனவரி 2011 இதழ் வெளிவந்துள்ளது.



140 பக்கத்தைக் கொண்ட காற்றுவெளியின் மின்னிதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் கடந்த டிசம்பர் மாத இதழ் பற்றிய மதிப்பீடு ஒன்றினை பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் எழுதியுள்ளார். தவிரவும் வழமையான அம்சங்களுடன் சிறப்பாக மிளிரும் காற்றுவெளியை இணையத்தில் நேரடியாகவே வாசிக்கலாம்.

வியாழன், டிசம்பர் 15

கலைஞர்களுக்கான வேண்டுகோள்





‘அகில இலங்கை கலை இலக்கிய சங்கம்’ இலங்கைக் கலைஞர்களின் விபரத் திரட்டினை ஆவணப்படுத்தி வெளியிடவுள்ளது.


கணனி மயப்படுத்தப்படவுள்ள விபரத் திரட்டினூடாக உலகெங்கும் வாழ்பவர்கள்; இலங்கைக் கலைஞர்களின் சிறந்த பணிகளை அறிந்து கொள்ளவும் அவர்களோடு நேரடியாகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.


இலங்கையிலும், புலம்பெயர்ந்தும் வாழும் இலங்கைக் கலைஞர்கள் தங்கள் சுயவிபரத்தினை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சங்கச் செயலாளர் எஸ்.கணபதிப்பிள்ளை அறிவித்துள்ளார்.


பொன் சுகந்தன்
தலைவர்
அகில இலங்கை கலை இலக்கிய சங்கம்
நெல்லியடி கரவெட்டி

தொடர்புக்கு :- 0776524775

செவ்வாய், டிசம்பர் 13

நூல் அறிமுக அரங்கு


'உயில்' கலை இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் நந்தினிசேவியரின் "நெல்லிமரப் பள்ளிக்கூடம்" என்ற சிறுகதைத் தொகுதி நூல் அறிமுக அரங்கு 17.12.2011 மாலை 3.00 மணிக்கு நெல்லியடி மாலிசந்தியில் அமைந்துள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வு பற்றிய அழைப்பிதழ்


ஞாயிறு, டிசம்பர் 11


நந்தினி சேவியர்


2012 இல் தரம் 10 கற்கவிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 'தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநூலில்' (திருத்தப்பட்ட மீள்பதிப்பு) நாடறிந்த மூத்த எழுத்தாளர்களில் ஒருவராகிய நந்தினி சேவியரின் சிறுகதைகள் பற்றி கவிஞர் இ. முருகையன் எழுதிய கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.

இது நந்தினி சேவியர் அவர்களின் எழுத்துக்குக் கிடைத்த மேலுமொரு அங்கீகாரமாகக் கருதலாம்.

பாடநூலில் பக்கம் 32-36 வரையுள்ள அக்கட்டுரையினை வாசகர்களுக்கு தருகிறேன். (படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரிதாக்கி வாசிக்கமுடியும்)

- சு. குணேஸ்வரன்









வெள்ளி, நவம்பர் 18

பா. அகிலனின் 'சரமகவிகள்' கவிதைநூல் வெளியீட்டு விழா




பா. அகிலனின் 'சரமகவிகள்' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து 3 கவிதைகள்


(தேர்வு எனது)
---


பிண இலக்கம் 182

சிதைவாடை
நீக்கினால்
ஓலமுறைந்து சீழ்கொண்ட இன்னோராடை

முலையொன்றில்லை
மறுமுலையில் கிடந்தது ஒரு சிறுவுடல்
பிரித்தால் பிரியாது
ஓருடலாய் ஒட்டிக்கிடந்தது

சுத்தப்படுத்திய பின் எழுதினேன்
பிண இலக்கம் 182

---

பொதி இலக்கம் 106 உம் பிறவும்

முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை

இரத்த வெடில்
சிதம்பியழுகிய உடலை தொடமுதல்
முறிந்தன என்புகள்

"குழந்தைகள் போலும்"

மூடையாய் கட்டிய பின்
ஓரமாய் குவிக்கத் தொடங்கினோம்.

---

விசரி

காயமேதும் இல்லை.

ஒற்றையாடையில் மலமும்
மாதவிடாய் இரத்தமும் ஊறிக்கிடக்க
மாற்றுடை மறுத்தாள்
ஊன் மறுத்தாள்
பகலையும், இரவையும் ஊடறுத்தலறினாள்

மகவே.
மகவே.
மாயமே.

துரத்தி
விலங்கிட்டுக் கட்டிய பின்
உள மருத்துவருக்கு சிபாரிசு செய்தோம்.





நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' வெளியீட்டு விழா



வெள்ளி, நவம்பர் 4

து. குலசிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்



பருத்தித்துறை பிரதேச செயலகம் நடாத்தும் 'வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா' சனிக்கிழமை பி.ப1.30 மணிக்கு இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில் பிரதேச கலாசாரப் பேரவையினர் 2011 ஆம் ஆண்டுக்கான கலைப்பிரதி விருதினை 5 பேருக்கு வழங்குகிறார்கள். அதில் எனது அன்புக்குரிய இலக்கிய உறவு இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களும் ஒருவர்.

யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற இலக்கிய நேசமுள்ள மனிதர்கள் சிலரில் குலசிங்கமும் ஒருவர். அவர் ஒரு படைப்பாளி அல்ல. தீவிரமான வாசகன், இலக்கியத்தை நேசிப்பவர். நல்ல இலக்கியப் புதினங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்.

வடமராட்சி போர்ச்சூழலுக்குள் முடங்கியிருந்தபோது அப்போதைய மக்களின் மனத்துயரங்கள் பற்றி தமிழகத்திலிருந்து வெளிவந்த காலச்சுவடு சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணலில் விரிவாகப் பேசியிருந்தார்.

ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் இலக்கியப் பொக்கிஷம், தனது சொந்தப் பணத்தை நல்ல நூல்களின் தேட்டமாக ஆக்கி வைத்துள்ளார். இவர் அவ்வப்போது எழுதிய கடிதங்கள் தமிழகப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கனடாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'காலம்' ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது.அது பின்னர் பிரான்சில் இருந்து வெளிவந்த 'உயிர்நிழல்' சஞ்சிகையிலும் வெளியாகியிருந்தது.

மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு நலப்பணிகளுக்கு விளம்பரமில்லாத வகையில் அடக்கமாக ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார். வாழ்வகம், அஞ்சலியகம் ஆகியவற்றின் சில நல்ல முயற்சிகளுக்கு உதவியிருக்கிறார்.

மிக முக்கியமான ஒரு பணியாக அண்மையில் வெளிவந்த கிரியா அகராதிக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. 1700 இலங்கைச் சொற்கள் அந்த அகராதியில் இடம்பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 'அறிவோர் கூடல்' என்ற இலக்கியம் சார் அமைப்பினூடாக நல்ல விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு களம் அமைத்து வருகிறார்.

அவரின் இந்தப் பணிகளுக்கு எல்லாம் உற்சாகத்தைக் கொடுப்பதாக இந்தக் கௌரவம் அமையும் என்று எண்ணுகிறேன். அண்ணன் குலசிங்கம் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சு. குணேஸ்வரன் (துவாரகன்)


உயிர்நிழல் ஒக்டோபர் 2011 இதழ் வெளிவந்துள்ளது.





புகலிடத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் உயிர்நிழலின் 34 வது இதழ் வெளிவந்துள்ளது.

இவ்விதழில் திருமாவளவன், ஆழியாள் ஆகியோரின் கவிதைகளும், உளநல மருத்துவர் எஸ் சிவதாசன் அவர்களுடனான நீண்ட உரையாடலும்; மீராபாரதி,ஜிஃப்றி ஹாஸன், கலையரசன், ஆகியோரின் அரசியற்கட்டுரைகளும்; தர்மசிறி பண்டாரநாயக்காவின் 'த ட்ராகன்' நாடகம் பற்றிய பார்வையும் (தொகுத்துத் தந்திருப்பவர் பா. துவாரகன்); மற்றும் பேராசிரியர் கா. சி பற்றிய எம். பௌசர் எழுதிய கட்டுரையும், புலம்பெயர் அமைப்புக்கள் பற்றி சிவலிங்கம் எழுதிய கட்டுரையுமாக இதழை அலங்கரிக்கின்றன.

நபீலின் கவிதைகள் பற்றி பஹீமாவின் கட்டுரையுடன் கடிதங்களும் இணைந்துள்ளன.

கனதியாக அமைந்திருக்கும் சில கட்டுரைகள் ஆழமான வாசிப்பைக் கோருவனவாக அமைந்துள்ளன.

சனி, அக்டோபர் 8

கலாநிதி ஆ. கந்தையா காலமானார்



ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளருமான கலாநிதி ஆ. கந்தையா ஒக்டோபர் 3ஆந் திகதி காலமானார் என்ற செய்தி அறிந்தேன்.

அன்னார் 45 வரையான நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் புனைவுசார நூல்கள் மிகுந்த கவனத்திற்குரியன. இலங்கையில் வாழ்ந்தபோதும் பின்னர் அவுஸ்திரேலியாவில்  வாழ்ந்து வந்தபோதும் எழுத்துத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். "ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்"  என்ற நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு ஒன்றினை அண்மையில்தான் எழுதியிருந்தேன். அது முதலில் புதிய நூலகத்திலும்திண்ணையிலும்  வந்திருந்தது.

அன்னாரின் தமிழ்ப்பணிகள் என்றும் நினைக்கத்தக்கவை. நான் எழுதிய நூல் அறிமுகத்தினை அன்னாருக்கு எனது அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறேன்.

வெள்ளி, செப்டம்பர் 30

விருது பெறும் மூத்த படைப்பாளிகளுக்கு வாழ்த்து



எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் ஒக்டோபர் 14,15,16 இல் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் கிழக்குமாகாண முதலமைச்சர் விருது பெறுகிறார்
.

எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் ஒக்டோபர் 7,8 இல் மன்னாரில் நடைபெறவிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் விருது பெறுகிறார்.


ஈழத்தமிழ்ப் புனைகதைத்துறையில் தவிர்க்கமுடியாத படைப்பாளிகளாக விளங்கும் இரண்டு இலக்கிய ஆளுமைகளுடனும் மிக நெருக்கமான இலக்கிய நட்பினைப் பேணி வருபவர்களில் நானும் ஒருவன்.

ஆரோக்கியமான வழிகாட்டலை எப்போதும் வழங்கும் இரண்டு இலக்கிய ஆளுமைகளுக்கும் கிடைக்கும் கெளரவத்தை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இருவருக்கும் அன்புநிறை வாழ்த்துக்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 25

பேராசிரியர் செ.யோகராசாவுக்கு கெளரவம்

பேராசிரியர் செ. யோகராசா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் யாழ் அரசாங்க அதிபர் அவர்களுடன் கரவெட்டி பிரதேச செயலர் எஸ். சத்தியசீலன், மற்றும் கலாசார உத்தியோகத்தர் சி.சிவஞானசீலன்



வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் (25.09.2011) நடாத்திய கலை இலக்கிய விழாவில் கலைஞர் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு கெளரவிப்பு நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையில் பணியாற்றும் பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தமிழ்ப்பணிக்காக ஆற்றிவரும் சேவைகளுக்காகக் கெளரவிக்கப்பட்டார்.

கௌரவம் பெற்ற எனது ஆசானை வணங்குகிறேன்.
-சு.குணேஸ்வரன்-

நிகழ்வில் இருந்து சில படங்கள்








கௌரவம் பெற்ற ஏனைய கலைஞர்கள்
மற்றும் சமூக சேவையாளர்.


கௌரவம் பெற்றவர்கள் சார்பாக
ஏற்புரை நிகழ்த்தும் பேராசிரியர் செ. யோகராசா

ஞாயிறு, செப்டம்பர் 18

புதிய நூலகம் 8 வது செய்திமடல் வெளிவந்துள்ளது.



நூலகம் நிறுவனத்தின் புதிய நூலகம் செய்திமடலின் 8 வது இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் பத்தாயித்தை எட்டும் ஆவணப் பதிவுகள், கோபியின் ‘எண்ணிம நூலகங்களின் பயன்பாடு’, சு.குணேஸ்வரனின் ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ - நூலறிமுகம், இயல்விருது ஆளுமைகள் மற்றும் 1983-2000 வரை வெளிவந்த புலம்பெயர்ந்தோரின் நாவல்கள் - பட்டியல் ஆகியன இடம்பெற்றுள்ளன.

தமிழின் முதற் கலைக்களஞ்சியமான ‘அபிதானகோசம்’ எழுதிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பற்றிய கட்டுரையுடன் நூலகத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ள சட்டநாதனின் நூல்கள் மற்றும் ஈழத்து மொழிபெயர்ப்பியல் நூல்கள் பற்றிய விபரங்களையும் கொண்டமைந்துள்ளது.

குறித்த காலப்பகுதியைத் தாண்டித் தாமதமாகவே 8 வது புதிய நூலகம் வெளிவந்துள்ளதாயினும் அதன் தொடர்ச்சியான வரவு தமிழியல் சார்ந்த பதிவுகள் என்ற வகையில் முக்கியமானது.

புதிய நூலகத்தின் முன்னைய செய்திமடல்களையும் இணையத்திலிருந்து இலவசமாகவே pdf கோவையாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
http://www.noolahamfoundation.org/wiki/index.php?title=Newsletter

பதிவு – சு. குணேஸ்வரன்


சனி, செப்டம்பர் 10

You Cannot Turn Away




கவிஞர் சேரனின் You Cannot Turn Away 

என்ற புதிய கவிதை நூல் வெளிவந்துள்ளது. இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைந்த இருமொழிப்பதிப்பாக வெளிவந்துள்ளது. 
நூல் பற்றிய மேலதிக விபரங்கள்


Product Description

Poetry. Bilingual Edition. Translated from the Tamil by Chelva Kanaganayakam. This book provides, for the first time, a bilingual edition of forty poems by R Cheran. Written over a period of three decades, the poems cover a range of experiences, including love, war, despair, hope, and diaspora. Cheran is considered one of the finest contemporary poets in Tamil, and his poetry is read widely in North America, Europe, and South Asia. Both modernist and unfailingly lyrical, his work is a remarkable blend of tradition and innovation.

About the Author

R Cheran is currently an associate professor in the Department of Sociology, Anthropology and Criminology at the University of Windsor. His publications include HISTORY AND IMAGINATION: TAMIL CULTURE IN THE GLOBAL CONTEXT (2007), New Demarcations: Essays in Tamil Studies (2009), Pathways of Dissent: Tamil Nationalism in Sri Lanka (2010), and Empowering Diasporas: Dynamics of Post War Tamil Transnational Politics (2011).

 • Paperback: 160 pages
 • Publisher: TSAR Publications (September 30, 2011)
 • Language: English
 • ISBN-10: 1894770749
 • ISBN-13: 978-1894770743

புதன், ஆகஸ்ட் 31

காற்றுவெளி



செப்ரெம்பர் மாத புதிய இதழ் வெளிவந்துள்ளது.



காற்றுவெளி செப்ரெம்பர் மாத இதழ் சமகால அரசியலை வெளிப்படுத்தும் கவிதைகளுடன், கலாமோகனின் 'மூன்று நகரங்களின் கதை' டொக்டர் முருகானந்தனின் மு.பொ பற்றிய கட்டுரை உள்ளடங்கலாக மலர்ந்துள்ளது.

காற்றுவெளி மின்னிதழின் செப்ரெம்பர் மாத அட்டையை அலங்கரிப்பது துவாரகனின் ஒளிப்படம்.

முத்தமிழ் விழா







திங்கள், ஆகஸ்ட் 29

நந்தினி சேவியரின் புதிய சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.




நெல்லிமரப் பள்ளிக்கூடம்

எழுத்தாளர் நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கொடகே சகோதரர்களால் வெளியிடப்பட்ட இந்நூலைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
நூலின் விலை 350

Mail Support By
VASTEC Technologies (pvt)Ltd.
#65,Station Road,
Vavuniya
Srilanka
024-2222869
024-2221412
mail@vastec.org
www.vastec.org

அல்லது
nanthiny xavier
269,N.C Road
Trincomalee.
T.P 0771495629

நூல் பற்றிய மேலதிக இணைப்பு





வியாழன், ஆகஸ்ட் 18

எழுத்தாளர் விபரத்திரட்டு





முல்லை அமுதன் அவர்களால் தொகுக்கப்பட்ட 'எழுத்தாளர் விபரத்திரட்டு' மின்நூல் வெளிவந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் படைப்பாளிகளின் பெயர் விபரங்களுடன் இந்நூல் வெளியாகியுள்ளது.

இது தனது முதல் முயற்சி எனவும் பலரின் விடுபடல்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் ஏனையவர்களின் அபிப்பிராயங்களுடன் மார்கழியின் பின்னர் நூலாக்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அடிப்படையில் (காலவரிசை,அகரவரிசை,படைப்புநிலை) தொகுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

முல்லை அமுதனின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

பின்வரும் இணைப்பில சென்று பார்க்கலாம்.http://writersdetail.blogspot.com/

- துவாரகன்

செவ்வாய், ஆகஸ்ட் 16

ஒரு சந்திப்பு



எழுத்தாளர் சுதாராஜ்

தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைத்தல், நூல்கள் கொள்வனவு, எழுத்தாளர்கள் வாசகர்களை ஊக்குவித்தல், வீட்டுநூலகத்திட்டம் ஆகியன குறித்து ஒரு சந்திப்பு 15.08.2011 அன்று கொற்றாவத்தை பூமகள் சனசமூக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் எழுத்தாளர் சுதாராஜ், புத்தக அபிவிருத்தி சபையின் தலைவரும் சிங்கள எழுத்தாளருமான குணசேன விதான, கல்வி அமைச்சின் புத்தக அபிவிருத்தி சபை செயலாளர் விஜித வெலகெடற ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமை தாங்கி கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.

கலந்துரையாடலில் ராஜேஸ்கண்ணன், கொற்றை பி.கிருஷ்ணானந்தன், சு.குணேஸ்வரன், தெணியான் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.
மூத்த எழுத்தாளர் தெணியான்

சிங்கள எழுத்தாளர் குணசேன விதான

ஞாயிறு, ஜூலை 31

கே. கிருஷ்ணபிள்ளை மறைவு

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 21.10.1979 இல் நடைபெற்ற, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டு மேடையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் கே. கிருஷ்ணபிள்ளை. அருகே கே. டானியலும் எஸ் ரி. என். நாகரெத்தினமும். சண்முகதாசனின் வாழ்த்துச் செய்தியை வி. ரி. இளங்கோவன் வாசிக்கிறார். (படம் :- நன்றி தேசம்நெற்)




முற்போக்குச் சிந்தனையுடைய சமூக முன்னோடியும் ஆசிரியருமான கே. கிருஷ்ணபிள்ளை அண்மையில் காலமானார். அன்னார் 60 களில் சாதியத்திற்கு எதிரான சீனசார்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் தன்னை இணைத்துப் போராடியவர்களில் முக்கியமானவர்.

ஆசிரியாராகவும் தமிழ்ப்புலமையாளனாவும் சிறந்த பேச்சாளனாகவும் திகழ்ந்தவர். எழுத்தாளர் டானியல் அவர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர். அன்னாரின் பணிகள் நினைவு கூரத்தக்கவை.

---

இணைப்பு -1


எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்பு


‘’சாதி ஒடுக்கு முறையால் பின்தள்ளப்பட்ட வடமாராட்சியின் கிராமங்களில் ஒன்றான மாயக்கையின் முக்கிய மனிதராக கிருஸ்ணபிள்ளை இருந்திருக்கிறார். (எனது ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதையில் அக்கிராமத்தை அடையாளப்படுத்தியிருக்கிறேன்.)


அவரை நான் அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலையில் ஒரு ஆசிரியராக அடையாளம் கண்டேன். இன்னொரு கிருஸ்ணபிள்ளை அங்கு ஆசிரியராக இருந்தமையால், இவர் ‘மாயக்கை கிருஸ்ணபிள்ளை’ யென ஊர்ப் பெயரால் அழைக்கப்பட்டார். பாரதியாரின் தலைப்பாகை கட்டுடன் கம்பீரமாக சைக்கிளில் வருவது எனக்குத் தெரியும். கவிஞர் அல்வாய் மு.செல்லையா வுடன் கவியரங்குகளில் அவர் கவிதை பாடியதை நான் அறிவேன். பின் நாட்களில் திருமண பந்தத்தினால் தொண்டைமனாறு வாசியாகினார்.


தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட நாட்களில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிட்டியது. எஸ்.ரி.என் நாகரத்தினத்திற்கு பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவராக அவர் இருந்தார். எழுத்தாளர். கே.டானியலுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் ஒரு இடதுசாரியாக இல்லாதிருந்த பொழுதும், சாதியத்துக்கெதிரான போராட்டங்களில் முன்னணி பங்காளாராக முழு மனதுடன் ஈடுபட்டார். சாதி ரீதியான ஒடுக்கு முறைகளை அனுபவித்ததன் வெளிப்பாடே அவரை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் பால் ஈர்த்தது என்பது மறக்க முடியா உண்மை.


சாதியம் மீண்டும் தலை தூக்க விளையும் இந்த நேரத்தில் அவரது இழப்பு மிக வருத்தத்துக்குரியது. அவருக்கு எம் தோழமை நிறைந்த அஞ்சலிகள்’’



இணைப்பு -2

வி.ரி இளங்கோவன் டானியல் பற்றி எழுதிய கட்டுரை. (நன்றி தினகரன்)

டானியல்

நினைவலைகள்...!

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘இலக்கியக் களம்’ நிகழ்ச்சியில் ‘டானியல் நினைவலைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) நிகழ்த்திய உரையின் சுருக்கம். ‘ஞானம்’ சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்.

டானியல் யார்? என்ன அவரது சாதனை? அவரை இன்றும் நினைத்துக்கொள்ள அவர் என்ன செய்துவிட்டார்?

டானியல் ஓர் அற்புதமான மனிதர் - கலைஞர் - மனிதாபிமானி. எல்லாவற்றுக்கும் மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி - நாவலாசிரியர் - சமூக விடுதலைப் போராளி. தடம்புரளாத அரசியல்வாதி.

ஈழத்தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து வறுமையோடு தவழ்ந்து, சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து, கடுமையாகப் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் தளைகளை அறுத்தெறிந்து அவர்களைச் சகமனிதர்களுடன் சமானமாக நிலைநிறுத்துவதற்குத் தன் உடல் பொருள் ஆவி என அத்தனையையும் அர்ப்பணித்துப் பணியாற்றியவர் தான் டானியல்.

என் இளமைக் காலத்தில் என் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திச் சரியான சமூகப் பார்வையுடன் பேனா பிடிக்க வழிகாட்டியவர்களில் முக்கியமானவர் கே. டானியல். சுமார் பதினான்கு ஆண்டுகள் அவரோடு இணைந்து பணியாற்றியதும் அவரது இறுதி மூச்சு பிரியும் வேளையிலும் உடனிருந்து உதவியதும் என்னால் மறக்க முடியாதனவாகும்.

தலித் இலக்கியம் தற்போது தமிழ் இலக்கியப் பரப்பில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த நாடுகளிலும் நம்மவர் மத்தியில் இதுகுறித்து சர்ச்சைகள் நோக்குகள் கூர்மையடைந்து விவாதத்திற்குரியனவாகின்றன. தலித் இலக்கியப் பிதாமகர், முன்னோடி எனத் தமிழக விமர்சகர்களாலும் ஈழத்து இலக்கியக்காரர் பலராலும் டானியல் விதந்துரைக்கப்படுகிறார். இதில் ஒரு விடயம் சுலபமாக மறக்கடிக்கப்படுவதாகத் தெரிகிறது.

டானியல் ஓடுக்கப்பட்ட மக்களில் அடிமட்டச் சமூகத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடியவர், எழுதியவர் என்பதாக மட்டுமே உணர்த்தப்படுகிறது. அவரது பொதுவுடமைக் கட்சிப் பணி மறைக்கப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. டானியல் இன்று உயிருடன் இருந்தால் நிச்சயமாக இத்தகைய பார்வையை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

டானியல் பொதுவுடமைக் கட்சியின் தொடர்பு காரணமாகவே சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியவர். பொதுவுடமைக் கட்சியினை வடபகுதிக்கு அறிமுகஞ் செய்து மக்கள் மத்தியில் பரவலாக்கி இறுதிவரை அதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் தோழர் மு. கார்த்திகேசன். அவரது தொடர்பு டானியலைப் பொதுவுடமை அரசியல் ரீதியாகவும், எழுத்துத் துறையிலும் வளப்படுத்தியது எனலாம்.

இளமைக் காலத்தில் வறுமையில் துவண்ட போதிலும், திருமணத்தின் பின்பு வறுமையும், இடர்பாடுகளும் வாட்டிவதைத்த போதிலும் அவர் கட்சிப் பணிகளிலிருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டவரல்ல. பொதுவுடமைக் கட்சியினது வடபிரதேசக் கிளையின் முழு நேரச் செயற்பாட்டாளராகப் பல வருடங்கள் பணியாற்றியவர் டானியல்.

60 களின் நடுப்பகுதியில் சர்வதேச ரீதியாகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இலங்கையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாகச் சோவியத் சார்பு, சீனச் சார்பு எனப் பிளவு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்திலும் ஏற்பட்டது. பெரும்பாலான உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கலை இலக்கியவாதிகள் தோழர் என் சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு கட்சியினை ஆதரித்தனர். டானியலும் தோழர் சண் பாதையிலேயே இயங்கியவர்.

1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜயவீரா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் தொடங்கிய கிளர்ச்சியினால் பொதுவுடமைக் கட்சி (சீனச் சார்பு) பலபின்னடைவுகளை, அடக்குமுறைகளை, சீர்குலைவுகளை எதிர்கொண்டது. முன்னணித் தலைவர்கள் பலரும் சிறையிடப்பட்டனர். டானியலும் சுமார் ஒரு வருடம் சிறையிடப்பட்டார். நீரிழிவு நோயாளியான அவர் பல வேதனைகளை சிறையில் அனுபவித்தார். சந்தர்ப்பவாதிகளால் கட்சியில் பிளவுகள் ஏற்பட்ட போதிலும் நேர்மைமிக்க தலைவரான தோழர் சண்முகதாசனின் பாதையிலேயே டானியல் இறுதிவரை செயற்பட்டார்.

1979ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் பிரமாண்டமான முழுநாள் மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பிரதிநிதிகளால் மண்டபம் நிரம்பி வழிந்தது. இம்மாநாட்டின் வெற்றிக்காக இரவு பகலாக டானியல் இயங்கியதை யான் அறிவேன். தோழர் சண் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். டானியல், எஸ். ரி. என். நாகரத்தினம், கே. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர் நந்தி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், கலைஞர் சிசு நாகேந்திரா, கலைஞர் குத்துவிளக்கு பேரம்பலம் உட்படப் பல கலை இலக்கியவாதிகள் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

‘எனக்கு ஓர் அரசியல் பாதை உண்டு. அதற்கு உந்து சக்தியாகவே எனது படைப்புகளைத் தருகிறேன்’ என டானியல் சொல்வதுண்டு டானியல் அரசியல் செயற்பாட்டாளர், சமூக விடுதலைப் போராளி, எழுத்தாளர், பேச்சாளர், ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அந்த வடிவத்தை அடையாளம் கண்டு எதிர்க்கின்ற பக்குவமும் துணிவும் ஆற்றலும் டானியலுக்கு இருந்தது. அதனால் யாழ். குடாநாட்டில் எந்தக் குக்கிராமத்தில் வாழும் மனிதனும் தனக்குச் சாதியின் பெயரால் அல்லது ஏதாவது வகையில் ஒடுக்குதல் - நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான பரிகாரம் தேடி ஆலோசனை பெற, ஆதரவு பெற டானியலைத் தேடி வருவதை யான் பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிறைந்த ஒரு மனிதனாக டானியல் விளங்கினார். அவரது செயற்பாடுகளுக்கு பேருதவியாகக் கட்சித் தோழர்கள் இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி 1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க அந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் முற்போக்கு எண்ணங்கொண்ட சகல மக்களும் – முஸ்லிம் மக்களுட்படக் கலந்துகொண்டனர். பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகியும் நிலைகுலையாத ஊர்வலம் யாழ்நகர் நோக்கிச் சென்றது. இந்த ஊர்வலத்திற்குத் தலைமை கொடுத்துச் சென்றவர்களில் டானியலும் ஒருவர்.

இதன் பின்னரே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உதயமானது. இது ஒரு சாதிச் சங்கம் அல்ல சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து நின்ற சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்த ஒரு பரந்த வெகுஜன இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டது. பல வெற்றிகளைக் கண்டது. கட்சி தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெற்றது. அன்று இலங்கைப் பாராளுமன்றம் முதல் சீன வானொலிவரை இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் பேசப்பட்டன. குடாநாட்டின் இருண்ட பகுதிகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் செயற்பாடுகள் அத்தனையிலும் டானியலின் பங்களிப்பு முக்கியமானது.

தலித்துகள் மட்டும் தான் தலித்துகளுக்காகப் போராடவேண்டும் என்ற சிலரது கூற்று சரியானதல்ல. வடபகுதியில் அன்று நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் அத்தகைய கருத்தைக் கொடுக்கவில்லை. அது தோழர் சண்முகதாசன் தலைமையிலான பொதுவுடமைக் கட்சியின் பூரண ஆதரவுடன் சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து நடைபெற்றது. பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் இதற்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள். பேராசிரியர் கைலாசபதி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், முருகையன்.

இளங்கீரன், அம்பலத்தாடிகள் குழுவினர் மற்றும் இளந்தலைமுறையைச் சேர்ந்த பல கலை இலக்கியப் படைப்பாளிகள் தலித்துகள் அல்ல. ஆனால் அவர்கள் உறுதுணையாகச் செயற்பட்ட மார்க்ஸிசவாதிகள். இலங்கையில் ஈழகேசரி, மறுமலர்ச்சி மற்றும் வீரகேசரி, தினகரன் ஆகியவற்றில் எழுதத் தொடங்கிய டானியல் தமிழ்நாட்டில் வெளிவந்த சிறந்த இலக்கிய இதழான சரஸ்வதியிலும் தம் படைப்புகளை வெளியிட்டார். சரஸ்வதியின் மிக முக்கியமான மூன்று படைப்பாளிகளில் ஒருவராய் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோருடன் இலங்கை எழுத்தில் முதற் படைப்பாளியாய் சரஸ்வதியில் தொடர்ந்து சிறுகதைகளைப் படைத்தாரெனப் பிரபல எழுத்தாளர் தஞ்சைப் ப்ரகாஷ் குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி இதழில் டானியலின் உருவம் முகப்புப் புகைப்படமாய் அட்டையில் 1951ல் பிரசுரம் செய்யப்பட்டு பாராட்டப்பட்டார்.

அத்துடன் ப. ஜீவானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தாமரை கலை இலக்கிய ஏட்டிலும் எழுதினார்.

டானியல் கதைகள் (சிறுகதைத் தொகுதி) பஞ்சமர் நாவல் இருபாகங்கள் உலகங்கள் வெல்லப்படுகின்றன. (சிறுகதைத் தொகுதி) போராளிகள் காத்திருக்கின்றனர். நாவல், இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக் குரல் - பேட்டி மற்றும் கோவிந்தன், அடிமைகள், கானல் தண்ணீர், பஞ்சகோணங்கள் ஆகிய பஞ்சமர் வரிசை நாவல்கள், நெடுந்தூரம், மையக்குறி, முருங்கையிலைக் கஞ்சி, பூமரங்கள், சா நிழல் ஆகிய குறுநாவல்கள், என் கதை, கட்டுரை என்பன நூலுருவில் வெளிவந்த டானியலின் படைப்புகளாகும்.

தொகுப்பு: கே.பொன்னுத்துரை

வியாழன், ஜூலை 28

கவிஞர் தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள்





1.சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது

2.நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருது

கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி, ஊடக எழுத்து, ஒளிப்படம், என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இரண்டு விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளது.

நெருக்கடிக் காலத்தில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான அவரது கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து ஊடகங்களிலும், தமிழக சஞ்சிகைகளிலும், அவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இணையத்தில் மிக பரவலாக அவரது படைப்புக்களை, ஊடக எழுத்துக்களை வாசிக்க முடியும்.

2000 ற்குப் பின்னரான ஈழத்துக் கவிதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத இளங்கவிஞராகத் திகழ்ந்து வரும் தீபச்செல்வனின் பணிகள் தொடரவேண்டும்.

தீபச்செல்வனுக்கு ‘வல்லைவெளி’ வலைப்பதிவின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- துவாரகன்

விருது தொடர்பான மேலதிக தகவல்களை இந்த இணைப்பினூ
டாக வாசிக்கலாம்.

சனி, ஜூலை 16

இராசரத்தினம் சண்முகலிங்கம்





சில இழப்புக்கள் நெஞ்சைப் பிழிபவை. நினைவைக் கொல்பவை. அப்படியான சிலரில் என் அன்புக்குரிய பவுண் ஐயா வும் ஒருவர்.

மறைந்த இராசரத்தினம் சண்முகலிங்கம் தொண்டைமானாற்றைச் சேர்ந்தவர். சமூக சேவையாளர்.

மூத்த பெண் எழுத்தாளர் குந்தவையின் (சடாட்சரதேவி) சகோதரர்.

நான் குந்தவையுடன் கதைக்கச் செல்லும்போதெல்லாம் மிக அன்பாகப் பழகுபவர். எங்கள் ஊரவர்களுக்காக பொதுவேலைகளில் மிகுந்த பங்களிப்புச் செய்தவர். தாமதமாகவே இவரது மரணச்செய்தி கிடைக்கப்பெற்றது.

எல்லோரும் பவுண்ஐயா என்றுதான் அழைப்போம்.

இலக்கியம் தவிர்ந்த வேறு எல்லாம் கதைப்பார். குந்தவையுடன் உரையாடும்போது இலக்கியத்தால் என்ன பிரயோசனம் என்று சிரித்துக் கொண்டு கேட்பார். நான் சொல்லுவேன் உங்கள் தங்கையைக் கேளுங்கோ என்று.

நான், ஆசிரியராக இருக்கின்ற நண்பர் நவநீதன், மறைந்த கிராம சேவையாளர் வெ. பிறேமச்சந்திரன், சமூர்த்தி அலுவலராக இருக்கின்ற நண்பர் ஆ.ஆனந்தராசா ஆகியோர் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், சனசமூகநிலையம், கிராம அபிவிருத்தி வேலைகள் எல்லாவற்றிலும் முக்கியமான ஆலோசகராக விளங்குவார்.

'கனடா நற்பணி மன்றம்' என்ற அமைப்பினூடாக அன்னார் மாணவர்களின் கல்விக்கு செய்த சேவைகள் அளப்பரியன. மறையும் வரை எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆங்கில ஆசானாக விளங்கி வந்துள்ளார். அன்னாரோடு பழகக் கிடைத்த காலங்கள் மிக இனிமையானவை.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

- சு.குணேஸ்வரன்

ஞாயிறு, ஜூலை 10

பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவஞ்சலி




வடமராட்சி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில்
தமிழ்ப் பேரறிஞர்
பேராசிரியர் கா.சிவத்தம்பி
நினைவஞ்சலி

காலம் :- 15.07.2011 வெள்ளிக்கிழமை மாலை 3.30
இடம் :- யா/தேவரையாளி இந்துக்கல்லூரி.

தலைமை
மூத்த எழுத்தாளர் தெணியான்

உரை நிகழ்த்துவோர்
• மு. அநாதரட்சகன் - ‘மார்க்சியம் பற்றிய பார்வை’
• து. குலசிங்கம் - ‘மனிதநேயம்’
• குப்பிழான் ஐ. சண்முகன் - ‘இலக்கிய இயக்கம்’
• வேல் நந்தகுமார் - ‘செவ்வியல் இலக்கியப் பார்வை’
• சு. குணேஸ்வரன் - ‘நவீன இலக்கியம் பற்றிய கருத்துநிலை’
• த. அஜந்தகுமார் - ‘மொழியியற் சிந்தனை’
• வல்வை ந. அனந்தராஜ் - ‘கல்வியியற் பணிகள்’
• கலாநிதி த. கலாமணி - ‘நாடகம் பற்றிய பார்வை’
• இரா. இராஜேஸ்கண்ணன் - ‘சமூகவியற் புலமை’

-வடமராட்சி இலக்கிய வட்டம்

திங்கள், ஜூலை 4

கலைமுகம் 51 வது புதிய இதழ்


ஈழத்துச் சிற்றிதழ்ச் சூழலில் கவனத்திற்குரிய இதழாக வளர்ந்து வரும் 'கலைமுகம்' புதிய இதழ் 51 (ஏப்ரல்-யூன்) வெளிவந்துள்ளது.

இவ்விதழில் பெண்ணியா, யோகி, ந.மயூரரூபன், வேலணையூர் தாஸ், மீனாள் செல்வன், பஹீமாஜஹான், ந.சத்தியபாலன், துவாரகன், வே.ஐ.வரதராஜன், கு.றஜீபன், த.ஜெயசீலன், சித்தாந்தன் ஆகியோரின் கவிதைகள் உள்ளன.

கட்டுரைகளில் ‘எண்பதுகளில் புகலிடப் புனைகதைகள்- பார்த்திபனின் படைப்புக்களை மையமாகக் கொண்ட பார்வை’ என்ற கட்டுரையை சு.குணேஸ்வரனும், ‘ஆகாயப் பூக்கள் கிளரும் நினைவுகள்’ என்ற கட்டுரையை அ. யேசுராசாவும், இளம் ஓவியர் வாசனின் ‘கருவாடு காண்பியக் கலைக்காட்சி’ பற்றி பப்சி மரியதாசனும், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’ பற்றி குப்பிழான் ஐ.சண்முகனும், ‘தமிழ்ப்பாட நூல்களில் பேச்சுத்தமிழ்’ என்ற கட்டுரையை சிறீநதிபரன் ஆகியோரும் எழுதியுள்ளனர்.

சிறுகதைகளை தாட்சாயணி, யோ.கர்ணன், ரிஷான் ஷெரீப், அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மொழிபெயர்ப்புக் கட்டுரையாக: தலைசிறந்த நவீன நாடகாசிரியர்களில் ஒருவரான விஜய் ரெண்டுல்கார் பற்றி ஜி.ரி. கேதாரநாதனும், சீனா உதயகுமாரின் ‘செந்நீரும் கண்ணீரும்’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய மதிப்பீட்டினை தாட்சாயணியும், ‘சோலைக்கிளியின் கவிதைமொழி’ என்ற தொடரை செளஜன்யஷாகரும் எழுதியுள்ளனர்.

கிரியாவில் பிரெய்லி தமிழ் அகராதி வாழ்வகத்திற்கு கையளித்தமை பற்றிய விபரத்தை மாதங்கன் எழுதியுள்ளார்.

மற்றும்… மிக நீண்ட ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் வாசகர் கடிதங்களுடன் வழமையான அம்சங்களைகளையும் இணைத்து இதழ் கனதியாக வெளிவந்துள்ளது.


சனி, ஜூன் 11

அகில இலங்கை கலை இலக்கியப் பெருவிழா

பதிவு - சு.குணேஸ்வரன்

அகில இலங்கை கலை இலக்கிய சங்கம் நடாத்தும் கலை இலக்கியப் பெருவிழா 2011 எதிர்வரும் 12.06.2011 ஞாயிறு காலை 8.00 மணிக்கு துன்னாலை வடிவேலர் மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலை இலக்கியப் பணிக்காக சிறப்பாகச் சேவையாற்றி வரும் திருமறைக் கலாமன்றத்திற்கு 2010 ற்கான விருதிவழங்கிக் கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

பிரதம அதிதிகளாக பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், விகடகவி மு.திருநாவுக்கரசு, செங்கை ஆழியான், பிரதேச செயலர் சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கலை இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா


பதிவு - சு.குணேஸ்வரன்

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும்; கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) விருது பெண்ணியாவின் ‘ஒரு நதியின் நாள்’ நூலுக்கும்; துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைநூலுக்கும் கிடைக்கவிருக்கிறது.

இலங்கை இலக்கியப்பேரவை விருதுபெறும் ஏனைய நூல்கள்

2008 ஆம் வருடத்துக்கான பரிசும் பாராட்டும் பெறும் நூல்கள்:
நாவல் - 'லோமியா' - எஸ்.ஏ.உதயன்
சிறுகதை - 'நினைவுகள் மடிவதில்லை' - சிற்பி சரவணபவன்
கவிதை-'இதுநதியின் நாள்' - பெண்ணியா
சிறுவர் இலக்கியம் -'வைரப்பனைமரம்' -திருமதி சந்திரா தனபாலசிங்கம்
நாடகம் -'ஒரு கலைஞரின் கதை'- கலைஞர் கலைச்செல்வன்
சமயம் -'சிவபோதச் சிற்றுரை' -மட்டுவில் அ.நடராசா
'இறைவிழுமியம்'- அருட்தந்தை அ.ஸ்ரிபன் (இருவருக்கு பரிசுகள்)
பல்துறை-'மனமெனும் தோணி'-கோகிலா மகேந்திரன்
மொழிபெயர்ப்பு- 1.'சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு' -செங்கை ஆழியன்
2. 'சிறுவர் நீதிப் போதனைக் கதைகள்'-வைரமுத்து சுந்தரேசன்

2009 ஆம் ஆண்டு பரிசு பெறும் நூல்கள்:

நாவல் -'துயரம் சுமப்பவர்கள்' -நீ.பி.அருளானந்தம்
ஆய்வு -'இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்' -கலாநிதி எஸ்.ஜெபநேசன்
சிறுகதை -'ஒருவருக்காக அல்ல'-அமரர் து.வைத்திலிங்கம்
கவிதை-'குரல்வழிக் கவிதை'-அல்.அஹுமத்
சிறுவர் இலக்கியம் – 'தீந்தேன்'- பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன்
நாடகம் -'கங்கையின் மைந்தன்'-அகளங்கன்
சமயம்-'ஞானதீபம்'- சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
பல்துறை-'பண்டைத் தமிழர் பண்பாட்டுத் தடங்கள்'-பேராசிரியர் கலாநிதி ம.இரகுநாதன் மொழி பெயர்ப்பு -'திறந்த கதவு'-திக்குவல்லை கமால்

2009 சான்றிதழ் பெறும் நூல்கள்

கவிதை – 1. ‘விற்பனைக்கு ஒரு கற்பனை’ – ஆரையூர் தாமரை

2. ‘இக்பால் கவிதைகள்’ –ஏ. இக்பால்

சிறுவர் இலக்கியம் – 1.‘தாமரையின் ஆட்டம்’ கே.எம். எம் இக்பால்

2. ‘குறும்புக்கார ஆமையார்’ ஓ.கே குணநாதன்

சிறுகதை – 1. ‘தொலையும் பொக்கிசங்கள்’ இராஜேஸ்கண்ணன்

2. ‘பாட்டுத் திறத்தாலே’ கலாநிதி த. கலாமணி

பல்துறை – 1.‘இலங்கையின் கல்வியும் இன உறவும்’ கெளரி சண்முகலிங்கன்

2.‘சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை’ – சிறீபிரசாந்தன்

நாடகம் - ‘கூத்துக்கள் ஐந்து’ கலையார்வன்

‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா



பதிவு - சு.குணேஸ்வரன்

வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா 18.06.2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

சிறீநிதி நந்தசேகரன், உபாலி லீலாரட்ண அதிதிகளாகக் கலந்து கொள்கிறார்கள். ராஜ சிறீதரன், செ. சதானந்தன், கலாநிதி த. கலாமணி, திக்குவல்லை கமால், இ. இராஜேஸ்கண்ணன்,கவிஞர் மேமன்கவி ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

வதிரி சி.ரவீந்திரன் அவர்கள் கலை இலக்கியத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். படைப்பாளிகளுடன் நல்லுறவினைப் பேணுபவர்களில் முதன்மையானவர். கலை இலக்கியத்தோடு விளையாட்டு, மெல்லிசைப்பாடல், நாடகம், ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது படைப்புக்களில் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியே நூலுருப் பெறும் முதலாவது தொகுதியாகும்.

புதன், மே 11

நூல் அறிமுகவிழா




மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக'

ஞாயிறு, மே 1

சிறகு முளைத்த தீயாக" கவிதைநூல் அறிமுகவிழா


மட்டுவில் ஞானகுமாரனின்
சிறகு முளைத்த தீயாக
கவிதைநூல் அறிமுக விழா

 • காலம் -14.05.2011 சனிக்கிழமை மாலை 3.30
 • இடம் -யாழ்ப்பாணம் ப.நோ.கூ.ச மண்டபம்
 • தலைமை - குப்பிழான் ஐ.சண்முகன்
 • வரவேற்புரை - தீபச்செல்வன்
 • வாழ்த்துரைகள் -நான் சித்தன் (வீரகேசரி)/பொ.ஐங்கரநேசன் (சூழலியலாளர்)
 • சிறப்புரை -வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
 • மதிப்பீட்டுரை - எஸ்.ரமேஸ்
 • நன்றியுரை - சு.குணேஸ்வரன்
 • ஏற்புரை - நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன்

இலக்கிய உறவுகளை அன்புடன் அழைக்கிறோம்

‘அறிவோர் கூடல்’
பருத்தித்துறை