சனி, ஏப்ரல் 30

காற்றுவெளி மேமாத மின்னிதழ் வெளிவந்துள்ளது.


காற்றுவெளி மேமாத மின்னிதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழிலும் மயூரரூபன்> துவாரகன்> தீபச்செல்வன்>பாயிஸாஅலி>திருக்குமரன்>நெடுந்தீவு முகிலன்> எம்.கே. முருகானந்தன்> ஒட்டமாவடி அறபாத்> அல் அஸமத்> எம்.ஏ நுஹ்மான்> மாரி மகேந்திரன்> மற்றும் மறைந்த அ.செ.மு ஆகிய ஈழத்தவர்களின் படைப்புக்கள் உள்ளடங்கியுள்ளன. இவர்களோடு தமிழக புகலிடப் படைப்பாளிகளின் படைப்புக்களும் உள்ளன.

'சுஜாதா விருது'
எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் உயிர்மையும் இணைந்து நடாத்திய 2011 ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இணையப் பிரிவில் லக்கிலுக் என்ற இணையத்தளமும் மணல்வீடு என்ற சிற்றிதழும் விருதுபெற்றுள்ளன. எனது வாசிப்புக்கு அகப்படும் வெளிகள் என்ற வகையில் எனது நண்பர்களுக்கும் அந்த விபரத்தைப் பரிமாறுகிறேன்.

விருது பெறுபவர்கள்

சிறுகதைப் பிரிவு

விருது பெறுபவர்: வண்ணதாசன்

நூல்: ஒளியிலே தெரிவது

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

தேர்வுக்குழு : இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார இந்திரஜித்நாவல் பிரிவு

விருது பெறுபவர்:.ஜோ டி குருஸ்

நூல்: கொற்கை

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

தேர்வுக்குழு : சுப்ரபாரதி மணியன், இமையம், பாரதி கிருஷ்ணகுமார்கட்டுரைப் பிரிவு

விருது பெறுபவர்: அழகிய பெரியவன்

நூல்: பெருகும் வேட்கை

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

தேர்வுக்குழு : அ.ராமசாமி, ந. முருகேச பாண்டியன், மணாகவிதைப் பிரிவு

விருது பெறுபவர்: ஸ்ரீநேசன்

நூல்: ஏரிக்கரையில் வசிப்பவன்

வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ்

தேர்வுக்குழு : ஞானக்கூத்தன், சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன்சிற்றிதழ் பிரிவு
விருது பெறுபவர்: மு. ஹரிகிருஷ்ணன்

சிற்றிதழ்: மணல் வீடு

தேர்வுக்குழு : சு. தியடோர் பாஸ்கரன், தமிழவன், கழனியூரன்இணையப் பிரிவு

விருது பெறுபவர்: யுவகிருஷ்ணா

இணையதளம்: www.luckylookonline.com

தேர்வுக்குழு : சாரு நிவேதிதா, ஷாஜி, தமிழ் மகன்

வெள்ளி, ஏப்ரல் 22

தமிழர் தொன்மை- கருத்தரங்கு
சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் ‘தமிழர் தொன்மை’ என்ற விடயம் பற்றி 24.04.2011 அன்று பருத்தித்துறை நீலவாசாவில் (அறிவோர் கூடல்) கருத்துரை வழங்க இருக்கிறார். மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகும் கருத்துரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும்.
பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் வசித்து வருகிறார். விவசாயத் துறையில் தனது முதற் பட்டத்தைப் பெற்றிருந்தும் தமிழார்வம் காரணமாக 2003 இல் தமிழ்த்துறைக்குள் காலடி எடுத்து வைக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைத் தமிழ் இலக்கியப் பட்டத்தையும் (Bachelor of Literature) தொடர்ந்து முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டத்தையும் ((MA) பெற்றுக்கொண்டார். சிங்கப்பூர் தமிழ்ப் பாடல்களில் மதிப்பீட்டாய்வினை மேற்கொண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர். (M.Phil) பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
தனது முனைவர் பட்ட (Ph.D)) ஆய்வினை 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கண விலக்கியப் பாடல்களில் காணப்படும் அயலகத் தொடர்புகள்’ என்ற தலைப்பின் கீழ் மேற்கொண்டார். தொடர்ந்து மேல் முனைவர் பட்ட ஆய்வினை (Post Doctorate follow) சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ‘சங்க இலக்கண விலக்கிப் பாடல்களில் காணப்படும் மேற்கோள் அடைவுகள்’ என்ற விடயத்தில் மேற்கொண்டார். தமிழ் நாட்டிலுள்ள முக்கிய ஆய்வாளர்களில் ஒருவராக விளங்குகின்ற பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் தனிப்பட்ட விடயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

தகவல்:- பா.துவாரகன்


சனி, ஏப்ரல் 16

சொற்கள் தவிர்க்கப்பட்ட காலம்

எனது 'மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்' கவிதைத் தொகுப்பின் மீதான பதிவுகளை இணைய நண்பர்களுக்கு மின்னூலாக விரைவில் தரவுள்ளேன்.
-துவாரகன்-

வெள்ளி, ஏப்ரல் 15

எழுத்தாளர் தகவல் தேவை
அன்புடையீர்.
வணக்கம்.
ஈழத்து இலக்கியப் பரம்பலை முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு நூல் சேகரிப்பு, ஈழத்து நூல்க் கண்காட்சியினை நடாத்துதல், ஈழத்து அறிஞர்களின் வாழ்வுக் குறிப்புக்களை ஆவணப்படுத்தல் என 'காற்றுவெளி' தன் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து 'இலக்கியப் பூக்கள்' நூலை சென்ற ஆண்டு (375 பக்கங்களில்) வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் தொகுதிக்கான கட்டுரைகளை கோரியுள்ளோம். 4/5 பக்கங்கள் வரக்கூடிய வகையில் ஒரு எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை எழுதி அனுப்பலாம்.
ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். கட்டுரை முழுத் தகவலும் அடங்கியதாக இருத்தல் வேண்டும். புகைப்படம் இணைத்திருப்பது அவசியம்.
மேலும்,
முதல் கண்காட்சியின் போது சிறியளவில் அறிமுகம் செய்ய முனைந்த எழுத்தாளர்களின் பட்டியலை இப்போது நூலாக வெளியிடவுள்ளோம். எனவே தங்களைப் பற்றிய தகவல்களைச் சுருக்கமாக(பெயர்,புனைபெயர்,பிறந்த திகதி,கல்வித் தகைமை,தொழில்,படித்த கல்வி நிறுவனங்கள்,பட்டங்கள்,வெளியிட்ட நூல்கள்,சஞ்சிகைகள் போன்ற விபரங்களுடன் ,புகைப்படத்துடன்) எழுதி அனுப்புவதன் மூலம் நூலைச் சிறப்படைய வைக்க முடியும்.
தொடர்ந்து காற்றுவெளியுடன் இணைந்திருங்கள்.
நட்புடன் -நம்பிக்கையுடன்-
முல்லைஅமுதன்.
Email:
Mullaiamuthan_03@hotmail.co.uk
mullaiamuthan@gmail.com

சனி, ஏப்ரல் 9

'பிறெய்லி அகராதி'
கிரியா ராமகிருஷ்ணன் அவர்களால் 'வாழ்வகம்' இல்லத்திற்கு வழங்கப்படவிருக்கும் மிகப்பெறுமதியான 'பிறெய்லி அகராதி' கையளிக்கும் நிகழ்வு நாளை ஞாயிறு மாலை 4.00 மணியளவில் வாழ்வகத்தில் இடம்பெறவுள்ளது.

தகவல் :-
இலக்கியச்சோலை து.குலசிங்கம்


மேலதிக வாசிப்புக்கான இணைப்பு :-


டொக்டர் எம்.கே முருகானந்தன் அவர்கள் எழுதிய பிறெய்லி அகராதி பற்றிய பதிவு.

(நன்றி :- டொக்டர் எம்.கே முருகானந்தன்

)


THURSDAY, NOVEMBER 4, 2010

விழிப்புலன் அற்றோருக்காக ப்ரெய்ல் பதிப்பில் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’

விழிப்புலன் அற்றோருக்காக ப்ரெய்ல் பதிப்பில் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’

தமிழ் ஆர்வலர்களுக்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பற்றித் தெரியாதிருக்க முடியாது. நூற்றாண்டு கால நவீன தமிழ் அகராதி வரலாற்றில் திடீர்ப் பாய்ச்சலான பாரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது அது.

இது வெறும் அகராதியாக இருக்கவில்லை. சொல்லின் பொருளை மட்டும் கொடுப்பதுதான் அகராதி என்ற எண்ணத்திற்கு இது நிரந்தர விடை கொடுத்துவிட்டது. அதற்கு அப்பாலும் அதன் பணி நீட்சியுறுகிறது. பெயர்ச் சொல்லாக, வினைச்சொல்லாக, துணைவினையாக, சொல்லின் பொருள் என்ன? அதன் இலக்கண வகை என்ன எனவும் பதிவு செய்கிறது.

அத்துடன் நின்று விடாது பொருத்தமான ஒரு வாக்கியம் மூலம் அதன் பொருளை உணர்த்தவும் செய்கிறது. இதனால் பன்முகம் கொண்ட மனித வாழ்வின் வாழ்வியல் கோலங்கள் ஆங்காங்கே தரிசனமாகிறது. இலக்கியப் படைப்பிற்குள் மூழ்குவது போன்ற மகிழ்வுடன் நடைபோட முடிகிறது.

21,000 சொற்களை உள்ளடக்கும் இந்நூலில் இலங்கைத் தமிழுக்கு கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அதாவது 1700 இடம் ஒதுக்கியிருப்பது நிச்சயம் பெருமை அடையக் கூடியதே.

உலகெங்கெணும் தமிழ் பேசப்படும் இடங்களில் எல்லாம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பரவியிருக்கிறது.

சிங்கப்பூர் அரசினால் இது அங்குள் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்று நூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் இதன் முக்கியத்துவம் பற்றி விளக்க வேறு ஆதாரங்கள் தேவையில்லை. சிங்கப்பூர் மாணவர்களுக்கென வெளியிடப்பட்ட விசேட பதிப்பில் தமிழ் சொற்களுக்கான ஆங்கில விளக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பொழுது விழிப்புலன் அற்றோருக்கு உதவும் வண்ணம் ப்ரெய்ல் பதிப்பு வெளிவர இருக்கிறது. க்ரியாவின் முன் முயற்சி காரணமாக Cognizant Foundation அறக்கட்டளை நிதி உதவி செய்ததன் மூலம் Indian Association for the Blind Madurai (IAB) க்ரியா அகராதி ப்ரெய்ல் பதிப்பை வெளியிடுகிறது.

தமிழ் அகராதியின் உள்ளடக்கத்தை ப்ரெய்ல் எழுத்திற்கு மாற்றுவதற்காக அதன் மின்வடிவப் பிரதி ஒன்றை க்ரியா அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. எந்தக் கொடுப்பனவுகளும் இன்றி இலவசமாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரெய்ல் வடிவில் வர இருக்கும் அவ் அகராதி பொதுவாக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கே உரியன. தனிநபர் பாவனைக்கு சாதாரணமாக கட்டுபடியாகாது. பிரதி ஒன்றைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ப்ரதி ஒன்றிற்கு ரூபா நாலு இலட்சம் செலுத்த வேண்டியுள்ளது.

பதிப்புக்கான ஆரம்ப வேலைகள் துவங்கிவிட்டதாக க்ரியாவிலிருந்து அறிய முடிகிறது. இவ்வருட இறுதியில் முதல் ப்ரெய்ல் பிரதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண அச்சில் ஒரு பக்கம் வரும் எழுத்துக்கள் ப்ரெய்ல் எழுத்தில் கொண்டுவர 6 பக்கங்கள் தேவைப்படும். எனவே இது ப்ரெய்ல் எழுத்தில் சுமார் 8400 பக்கங்களாகும். ஒரு நூலாகக் கொண்டு வருவது சாத்தியமற்றது. எனவே 70 தொகுப்புகளாக கொண்டு வர இருக்கிறார்கள்.

ஆரம்ப கட்டத்தில் 40 பிரதிகள் தயாரிக்க இருக்கிறார்கள். இதற்கு 11 இலட்சம் இந்திய ரூபாக்கள் செலவாகும். இப் பணத்தை Cognizant Foundationமானியமாக Indian Association for the Blind Madurai (IAB) நிறுவனத்திற்குத் தந்திருக்கிறது.

தமிழ் நாட்டில் பார்வையற்றோருக்காக இயங்கும் 20 பள்ளிகளுக்கும் 11 கல்லூரிகளுக்கும் ப்ரெய்ல் பிரதி மேற்சொன்ன பணத்தின் உதவியுடன் இலவசமாகக் கிட்ட இருக்கிறது.

இலங்கையிலும் விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலைகள் உள்ளன. அங்கு கல்வி கற்கும் மாணவர்களும் இந்த ப்ரெய்ல் பதிப்பின் மூலம் பலன் பெற முடியும். பிரதிகள் தேவைப்படுவோர் க்ர்யாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

இத்தகைய அரிய நூலின் பயனை இலங்கையில் உள்ள விழிப்புலன் அற்றோரும் பெறுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்க முன்வருவது அவசியமாகும்.

தமிழ் மொழியானது இன்று உலகின் மூலை முடுக்கெங்கும் பேசப்படுகிறது. அதன் சொற்கள் விசாலித்த பயணங்களை அங்கெல்லாம் மேற்கொள்கிறது. புதிய பண்பாட்டுச் சூழல்களுக்கு எமது மொழி வசப்படுகிறது. சொற்கள் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.

அவற்றின் சூட்சுமங்களை உலகின் ஏனைய பகுதியினரும் விளங்கிக் கொள்ள க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி தோழமையுடன் கை கொடுக்கிறது.

இலங்கைத் தமிழ் இவ் அகராதியில் செழுமையாக இடம் பெறுவதற்கு காரணமாக இருந்தவர் திரு.குலசிங்கம் ஆவார்.

“பருத்தித்துறையைச் சேர்ந்த இ.து.குலசிங்கம் பெரும் அதிஷ்டம் போல் எங்களுக்குக் கிடைத்தார். இலங்கைத் தமிழ் தரவுகளும் சொற்களும் நிறையக் கிடைப்பதற்கு உதவி செய்தார். இந்தப் பதிப்பில் இலங்கைத் தமிழ் பிரகாசமாக ஒளிர்கிறது என்றால் அதற்குக் குலசிங்கம்தான் காரணம்.”

என க்ரியா ராமகிருஸ்ணன் சொல்வதிலிருந்து அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர முடியும்.

மொழியியல் சார்ந்த சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்து உதவியிருப்பவர் ஞ.ஜெயசீலன் ஆகும். அதே போல இதன் முதற் பதிப்பிற்கு (1991) உதவியவர் பேராசிரியர் நுஃமான் என்பதும் குறிப்பிடத்தக்கது.