ஞாயிறு, ஜூலை 31

கே. கிருஷ்ணபிள்ளை மறைவு

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 21.10.1979 இல் நடைபெற்ற, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டு மேடையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் கே. கிருஷ்ணபிள்ளை. அருகே கே. டானியலும் எஸ் ரி. என். நாகரெத்தினமும். சண்முகதாசனின் வாழ்த்துச் செய்தியை வி. ரி. இளங்கோவன் வாசிக்கிறார். (படம் :- நன்றி தேசம்நெற்)




முற்போக்குச் சிந்தனையுடைய சமூக முன்னோடியும் ஆசிரியருமான கே. கிருஷ்ணபிள்ளை அண்மையில் காலமானார். அன்னார் 60 களில் சாதியத்திற்கு எதிரான சீனசார்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் தன்னை இணைத்துப் போராடியவர்களில் முக்கியமானவர்.

ஆசிரியாராகவும் தமிழ்ப்புலமையாளனாவும் சிறந்த பேச்சாளனாகவும் திகழ்ந்தவர். எழுத்தாளர் டானியல் அவர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர். அன்னாரின் பணிகள் நினைவு கூரத்தக்கவை.

---

இணைப்பு -1


எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்பு


‘’சாதி ஒடுக்கு முறையால் பின்தள்ளப்பட்ட வடமாராட்சியின் கிராமங்களில் ஒன்றான மாயக்கையின் முக்கிய மனிதராக கிருஸ்ணபிள்ளை இருந்திருக்கிறார். (எனது ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதையில் அக்கிராமத்தை அடையாளப்படுத்தியிருக்கிறேன்.)


அவரை நான் அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலையில் ஒரு ஆசிரியராக அடையாளம் கண்டேன். இன்னொரு கிருஸ்ணபிள்ளை அங்கு ஆசிரியராக இருந்தமையால், இவர் ‘மாயக்கை கிருஸ்ணபிள்ளை’ யென ஊர்ப் பெயரால் அழைக்கப்பட்டார். பாரதியாரின் தலைப்பாகை கட்டுடன் கம்பீரமாக சைக்கிளில் வருவது எனக்குத் தெரியும். கவிஞர் அல்வாய் மு.செல்லையா வுடன் கவியரங்குகளில் அவர் கவிதை பாடியதை நான் அறிவேன். பின் நாட்களில் திருமண பந்தத்தினால் தொண்டைமனாறு வாசியாகினார்.


தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட நாட்களில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிட்டியது. எஸ்.ரி.என் நாகரத்தினத்திற்கு பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவராக அவர் இருந்தார். எழுத்தாளர். கே.டானியலுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் ஒரு இடதுசாரியாக இல்லாதிருந்த பொழுதும், சாதியத்துக்கெதிரான போராட்டங்களில் முன்னணி பங்காளாராக முழு மனதுடன் ஈடுபட்டார். சாதி ரீதியான ஒடுக்கு முறைகளை அனுபவித்ததன் வெளிப்பாடே அவரை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் பால் ஈர்த்தது என்பது மறக்க முடியா உண்மை.


சாதியம் மீண்டும் தலை தூக்க விளையும் இந்த நேரத்தில் அவரது இழப்பு மிக வருத்தத்துக்குரியது. அவருக்கு எம் தோழமை நிறைந்த அஞ்சலிகள்’’



இணைப்பு -2

வி.ரி இளங்கோவன் டானியல் பற்றி எழுதிய கட்டுரை. (நன்றி தினகரன்)

டானியல்

நினைவலைகள்...!

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘இலக்கியக் களம்’ நிகழ்ச்சியில் ‘டானியல் நினைவலைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) நிகழ்த்திய உரையின் சுருக்கம். ‘ஞானம்’ சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்.

டானியல் யார்? என்ன அவரது சாதனை? அவரை இன்றும் நினைத்துக்கொள்ள அவர் என்ன செய்துவிட்டார்?

டானியல் ஓர் அற்புதமான மனிதர் - கலைஞர் - மனிதாபிமானி. எல்லாவற்றுக்கும் மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி - நாவலாசிரியர் - சமூக விடுதலைப் போராளி. தடம்புரளாத அரசியல்வாதி.

ஈழத்தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து வறுமையோடு தவழ்ந்து, சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து, கடுமையாகப் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் தளைகளை அறுத்தெறிந்து அவர்களைச் சகமனிதர்களுடன் சமானமாக நிலைநிறுத்துவதற்குத் தன் உடல் பொருள் ஆவி என அத்தனையையும் அர்ப்பணித்துப் பணியாற்றியவர் தான் டானியல்.

என் இளமைக் காலத்தில் என் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திச் சரியான சமூகப் பார்வையுடன் பேனா பிடிக்க வழிகாட்டியவர்களில் முக்கியமானவர் கே. டானியல். சுமார் பதினான்கு ஆண்டுகள் அவரோடு இணைந்து பணியாற்றியதும் அவரது இறுதி மூச்சு பிரியும் வேளையிலும் உடனிருந்து உதவியதும் என்னால் மறக்க முடியாதனவாகும்.

தலித் இலக்கியம் தற்போது தமிழ் இலக்கியப் பரப்பில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த நாடுகளிலும் நம்மவர் மத்தியில் இதுகுறித்து சர்ச்சைகள் நோக்குகள் கூர்மையடைந்து விவாதத்திற்குரியனவாகின்றன. தலித் இலக்கியப் பிதாமகர், முன்னோடி எனத் தமிழக விமர்சகர்களாலும் ஈழத்து இலக்கியக்காரர் பலராலும் டானியல் விதந்துரைக்கப்படுகிறார். இதில் ஒரு விடயம் சுலபமாக மறக்கடிக்கப்படுவதாகத் தெரிகிறது.

டானியல் ஓடுக்கப்பட்ட மக்களில் அடிமட்டச் சமூகத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடியவர், எழுதியவர் என்பதாக மட்டுமே உணர்த்தப்படுகிறது. அவரது பொதுவுடமைக் கட்சிப் பணி மறைக்கப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. டானியல் இன்று உயிருடன் இருந்தால் நிச்சயமாக இத்தகைய பார்வையை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

டானியல் பொதுவுடமைக் கட்சியின் தொடர்பு காரணமாகவே சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியவர். பொதுவுடமைக் கட்சியினை வடபகுதிக்கு அறிமுகஞ் செய்து மக்கள் மத்தியில் பரவலாக்கி இறுதிவரை அதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் தோழர் மு. கார்த்திகேசன். அவரது தொடர்பு டானியலைப் பொதுவுடமை அரசியல் ரீதியாகவும், எழுத்துத் துறையிலும் வளப்படுத்தியது எனலாம்.

இளமைக் காலத்தில் வறுமையில் துவண்ட போதிலும், திருமணத்தின் பின்பு வறுமையும், இடர்பாடுகளும் வாட்டிவதைத்த போதிலும் அவர் கட்சிப் பணிகளிலிருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டவரல்ல. பொதுவுடமைக் கட்சியினது வடபிரதேசக் கிளையின் முழு நேரச் செயற்பாட்டாளராகப் பல வருடங்கள் பணியாற்றியவர் டானியல்.

60 களின் நடுப்பகுதியில் சர்வதேச ரீதியாகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இலங்கையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாகச் சோவியத் சார்பு, சீனச் சார்பு எனப் பிளவு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்திலும் ஏற்பட்டது. பெரும்பாலான உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கலை இலக்கியவாதிகள் தோழர் என் சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு கட்சியினை ஆதரித்தனர். டானியலும் தோழர் சண் பாதையிலேயே இயங்கியவர்.

1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜயவீரா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் தொடங்கிய கிளர்ச்சியினால் பொதுவுடமைக் கட்சி (சீனச் சார்பு) பலபின்னடைவுகளை, அடக்குமுறைகளை, சீர்குலைவுகளை எதிர்கொண்டது. முன்னணித் தலைவர்கள் பலரும் சிறையிடப்பட்டனர். டானியலும் சுமார் ஒரு வருடம் சிறையிடப்பட்டார். நீரிழிவு நோயாளியான அவர் பல வேதனைகளை சிறையில் அனுபவித்தார். சந்தர்ப்பவாதிகளால் கட்சியில் பிளவுகள் ஏற்பட்ட போதிலும் நேர்மைமிக்க தலைவரான தோழர் சண்முகதாசனின் பாதையிலேயே டானியல் இறுதிவரை செயற்பட்டார்.

1979ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் பிரமாண்டமான முழுநாள் மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பிரதிநிதிகளால் மண்டபம் நிரம்பி வழிந்தது. இம்மாநாட்டின் வெற்றிக்காக இரவு பகலாக டானியல் இயங்கியதை யான் அறிவேன். தோழர் சண் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். டானியல், எஸ். ரி. என். நாகரத்தினம், கே. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர் நந்தி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், கலைஞர் சிசு நாகேந்திரா, கலைஞர் குத்துவிளக்கு பேரம்பலம் உட்படப் பல கலை இலக்கியவாதிகள் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

‘எனக்கு ஓர் அரசியல் பாதை உண்டு. அதற்கு உந்து சக்தியாகவே எனது படைப்புகளைத் தருகிறேன்’ என டானியல் சொல்வதுண்டு டானியல் அரசியல் செயற்பாட்டாளர், சமூக விடுதலைப் போராளி, எழுத்தாளர், பேச்சாளர், ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அந்த வடிவத்தை அடையாளம் கண்டு எதிர்க்கின்ற பக்குவமும் துணிவும் ஆற்றலும் டானியலுக்கு இருந்தது. அதனால் யாழ். குடாநாட்டில் எந்தக் குக்கிராமத்தில் வாழும் மனிதனும் தனக்குச் சாதியின் பெயரால் அல்லது ஏதாவது வகையில் ஒடுக்குதல் - நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான பரிகாரம் தேடி ஆலோசனை பெற, ஆதரவு பெற டானியலைத் தேடி வருவதை யான் பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிறைந்த ஒரு மனிதனாக டானியல் விளங்கினார். அவரது செயற்பாடுகளுக்கு பேருதவியாகக் கட்சித் தோழர்கள் இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி 1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க அந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் முற்போக்கு எண்ணங்கொண்ட சகல மக்களும் – முஸ்லிம் மக்களுட்படக் கலந்துகொண்டனர். பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகியும் நிலைகுலையாத ஊர்வலம் யாழ்நகர் நோக்கிச் சென்றது. இந்த ஊர்வலத்திற்குத் தலைமை கொடுத்துச் சென்றவர்களில் டானியலும் ஒருவர்.

இதன் பின்னரே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உதயமானது. இது ஒரு சாதிச் சங்கம் அல்ல சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து நின்ற சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்த ஒரு பரந்த வெகுஜன இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டது. பல வெற்றிகளைக் கண்டது. கட்சி தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெற்றது. அன்று இலங்கைப் பாராளுமன்றம் முதல் சீன வானொலிவரை இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் பேசப்பட்டன. குடாநாட்டின் இருண்ட பகுதிகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் செயற்பாடுகள் அத்தனையிலும் டானியலின் பங்களிப்பு முக்கியமானது.

தலித்துகள் மட்டும் தான் தலித்துகளுக்காகப் போராடவேண்டும் என்ற சிலரது கூற்று சரியானதல்ல. வடபகுதியில் அன்று நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் அத்தகைய கருத்தைக் கொடுக்கவில்லை. அது தோழர் சண்முகதாசன் தலைமையிலான பொதுவுடமைக் கட்சியின் பூரண ஆதரவுடன் சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து நடைபெற்றது. பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் இதற்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள். பேராசிரியர் கைலாசபதி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், முருகையன்.

இளங்கீரன், அம்பலத்தாடிகள் குழுவினர் மற்றும் இளந்தலைமுறையைச் சேர்ந்த பல கலை இலக்கியப் படைப்பாளிகள் தலித்துகள் அல்ல. ஆனால் அவர்கள் உறுதுணையாகச் செயற்பட்ட மார்க்ஸிசவாதிகள். இலங்கையில் ஈழகேசரி, மறுமலர்ச்சி மற்றும் வீரகேசரி, தினகரன் ஆகியவற்றில் எழுதத் தொடங்கிய டானியல் தமிழ்நாட்டில் வெளிவந்த சிறந்த இலக்கிய இதழான சரஸ்வதியிலும் தம் படைப்புகளை வெளியிட்டார். சரஸ்வதியின் மிக முக்கியமான மூன்று படைப்பாளிகளில் ஒருவராய் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோருடன் இலங்கை எழுத்தில் முதற் படைப்பாளியாய் சரஸ்வதியில் தொடர்ந்து சிறுகதைகளைப் படைத்தாரெனப் பிரபல எழுத்தாளர் தஞ்சைப் ப்ரகாஷ் குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி இதழில் டானியலின் உருவம் முகப்புப் புகைப்படமாய் அட்டையில் 1951ல் பிரசுரம் செய்யப்பட்டு பாராட்டப்பட்டார்.

அத்துடன் ப. ஜீவானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தாமரை கலை இலக்கிய ஏட்டிலும் எழுதினார்.

டானியல் கதைகள் (சிறுகதைத் தொகுதி) பஞ்சமர் நாவல் இருபாகங்கள் உலகங்கள் வெல்லப்படுகின்றன. (சிறுகதைத் தொகுதி) போராளிகள் காத்திருக்கின்றனர். நாவல், இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக் குரல் - பேட்டி மற்றும் கோவிந்தன், அடிமைகள், கானல் தண்ணீர், பஞ்சகோணங்கள் ஆகிய பஞ்சமர் வரிசை நாவல்கள், நெடுந்தூரம், மையக்குறி, முருங்கையிலைக் கஞ்சி, பூமரங்கள், சா நிழல் ஆகிய குறுநாவல்கள், என் கதை, கட்டுரை என்பன நூலுருவில் வெளிவந்த டானியலின் படைப்புகளாகும்.

தொகுப்பு: கே.பொன்னுத்துரை

வியாழன், ஜூலை 28

கவிஞர் தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள்





1.சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது

2.நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருது

கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி, ஊடக எழுத்து, ஒளிப்படம், என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இரண்டு விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளது.

நெருக்கடிக் காலத்தில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான அவரது கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து ஊடகங்களிலும், தமிழக சஞ்சிகைகளிலும், அவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இணையத்தில் மிக பரவலாக அவரது படைப்புக்களை, ஊடக எழுத்துக்களை வாசிக்க முடியும்.

2000 ற்குப் பின்னரான ஈழத்துக் கவிதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத இளங்கவிஞராகத் திகழ்ந்து வரும் தீபச்செல்வனின் பணிகள் தொடரவேண்டும்.

தீபச்செல்வனுக்கு ‘வல்லைவெளி’ வலைப்பதிவின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- துவாரகன்

விருது தொடர்பான மேலதிக தகவல்களை இந்த இணைப்பினூ
டாக வாசிக்கலாம்.

சனி, ஜூலை 16

இராசரத்தினம் சண்முகலிங்கம்





சில இழப்புக்கள் நெஞ்சைப் பிழிபவை. நினைவைக் கொல்பவை. அப்படியான சிலரில் என் அன்புக்குரிய பவுண் ஐயா வும் ஒருவர்.

மறைந்த இராசரத்தினம் சண்முகலிங்கம் தொண்டைமானாற்றைச் சேர்ந்தவர். சமூக சேவையாளர்.

மூத்த பெண் எழுத்தாளர் குந்தவையின் (சடாட்சரதேவி) சகோதரர்.

நான் குந்தவையுடன் கதைக்கச் செல்லும்போதெல்லாம் மிக அன்பாகப் பழகுபவர். எங்கள் ஊரவர்களுக்காக பொதுவேலைகளில் மிகுந்த பங்களிப்புச் செய்தவர். தாமதமாகவே இவரது மரணச்செய்தி கிடைக்கப்பெற்றது.

எல்லோரும் பவுண்ஐயா என்றுதான் அழைப்போம்.

இலக்கியம் தவிர்ந்த வேறு எல்லாம் கதைப்பார். குந்தவையுடன் உரையாடும்போது இலக்கியத்தால் என்ன பிரயோசனம் என்று சிரித்துக் கொண்டு கேட்பார். நான் சொல்லுவேன் உங்கள் தங்கையைக் கேளுங்கோ என்று.

நான், ஆசிரியராக இருக்கின்ற நண்பர் நவநீதன், மறைந்த கிராம சேவையாளர் வெ. பிறேமச்சந்திரன், சமூர்த்தி அலுவலராக இருக்கின்ற நண்பர் ஆ.ஆனந்தராசா ஆகியோர் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், சனசமூகநிலையம், கிராம அபிவிருத்தி வேலைகள் எல்லாவற்றிலும் முக்கியமான ஆலோசகராக விளங்குவார்.

'கனடா நற்பணி மன்றம்' என்ற அமைப்பினூடாக அன்னார் மாணவர்களின் கல்விக்கு செய்த சேவைகள் அளப்பரியன. மறையும் வரை எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆங்கில ஆசானாக விளங்கி வந்துள்ளார். அன்னாரோடு பழகக் கிடைத்த காலங்கள் மிக இனிமையானவை.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

- சு.குணேஸ்வரன்

ஞாயிறு, ஜூலை 10

பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவஞ்சலி




வடமராட்சி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில்
தமிழ்ப் பேரறிஞர்
பேராசிரியர் கா.சிவத்தம்பி
நினைவஞ்சலி

காலம் :- 15.07.2011 வெள்ளிக்கிழமை மாலை 3.30
இடம் :- யா/தேவரையாளி இந்துக்கல்லூரி.

தலைமை
மூத்த எழுத்தாளர் தெணியான்

உரை நிகழ்த்துவோர்
• மு. அநாதரட்சகன் - ‘மார்க்சியம் பற்றிய பார்வை’
• து. குலசிங்கம் - ‘மனிதநேயம்’
• குப்பிழான் ஐ. சண்முகன் - ‘இலக்கிய இயக்கம்’
• வேல் நந்தகுமார் - ‘செவ்வியல் இலக்கியப் பார்வை’
• சு. குணேஸ்வரன் - ‘நவீன இலக்கியம் பற்றிய கருத்துநிலை’
• த. அஜந்தகுமார் - ‘மொழியியற் சிந்தனை’
• வல்வை ந. அனந்தராஜ் - ‘கல்வியியற் பணிகள்’
• கலாநிதி த. கலாமணி - ‘நாடகம் பற்றிய பார்வை’
• இரா. இராஜேஸ்கண்ணன் - ‘சமூகவியற் புலமை’

-வடமராட்சி இலக்கிய வட்டம்

திங்கள், ஜூலை 4

கலைமுகம் 51 வது புதிய இதழ்


ஈழத்துச் சிற்றிதழ்ச் சூழலில் கவனத்திற்குரிய இதழாக வளர்ந்து வரும் 'கலைமுகம்' புதிய இதழ் 51 (ஏப்ரல்-யூன்) வெளிவந்துள்ளது.

இவ்விதழில் பெண்ணியா, யோகி, ந.மயூரரூபன், வேலணையூர் தாஸ், மீனாள் செல்வன், பஹீமாஜஹான், ந.சத்தியபாலன், துவாரகன், வே.ஐ.வரதராஜன், கு.றஜீபன், த.ஜெயசீலன், சித்தாந்தன் ஆகியோரின் கவிதைகள் உள்ளன.

கட்டுரைகளில் ‘எண்பதுகளில் புகலிடப் புனைகதைகள்- பார்த்திபனின் படைப்புக்களை மையமாகக் கொண்ட பார்வை’ என்ற கட்டுரையை சு.குணேஸ்வரனும், ‘ஆகாயப் பூக்கள் கிளரும் நினைவுகள்’ என்ற கட்டுரையை அ. யேசுராசாவும், இளம் ஓவியர் வாசனின் ‘கருவாடு காண்பியக் கலைக்காட்சி’ பற்றி பப்சி மரியதாசனும், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’ பற்றி குப்பிழான் ஐ.சண்முகனும், ‘தமிழ்ப்பாட நூல்களில் பேச்சுத்தமிழ்’ என்ற கட்டுரையை சிறீநதிபரன் ஆகியோரும் எழுதியுள்ளனர்.

சிறுகதைகளை தாட்சாயணி, யோ.கர்ணன், ரிஷான் ஷெரீப், அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மொழிபெயர்ப்புக் கட்டுரையாக: தலைசிறந்த நவீன நாடகாசிரியர்களில் ஒருவரான விஜய் ரெண்டுல்கார் பற்றி ஜி.ரி. கேதாரநாதனும், சீனா உதயகுமாரின் ‘செந்நீரும் கண்ணீரும்’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய மதிப்பீட்டினை தாட்சாயணியும், ‘சோலைக்கிளியின் கவிதைமொழி’ என்ற தொடரை செளஜன்யஷாகரும் எழுதியுள்ளனர்.

கிரியாவில் பிரெய்லி தமிழ் அகராதி வாழ்வகத்திற்கு கையளித்தமை பற்றிய விபரத்தை மாதங்கன் எழுதியுள்ளார்.

மற்றும்… மிக நீண்ட ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் வாசகர் கடிதங்களுடன் வழமையான அம்சங்களைகளையும் இணைத்து இதழ் கனதியாக வெளிவந்துள்ளது.