திங்கள், டிசம்பர் 23

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் ஜி.ரி. கேதாரநாதன்
     பத்திரிகைத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய ஜி.ரி கேதாரநாதன் நவீன இலக்கியம் குறித்த கட்டுரைகள், மாற்றுச் சினிமா, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில்இயங்கியவர். இவரின் பணியைப் பாராட்டி இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் 20 ஆவது சிறப்பு ஊடக விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவினால் அன்றையதினம் கல்கிசையில் நடைபெற்ற விருது விழாவில் அவரால் கலந்து கொள்ளமுடியாத நிலையில் அவரது சகோதரன் ஓவியர் கோ. கைலாசநாதன் அன்றைய தினம் அவர்சார்பாக அவ்விருதினைப் பெற்றுக்கொண்டார். கேதாரநாதன் எழுதிய சினிமா தொடர்பான கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் உள்ளடங்கிய நூல் ஒன்றும் விரைவில் வெளிவரவுள்ளது. அவரின் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜி.ரி கேதாரநாதன் குறித்த பத்திரிகைக் குறிப்பொன்று (தினக்குரல், 08.12.2019) பின்வருமாறு,

“யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த கோபாலபிள்ளை திருக்கேதாரநாதன் சிறு சஞ்சிகைகள் மூலமாக கலை இலக்கியத்துறையில் எழுத்து அனுபவத்தை பாடசாலை நாட்களிலேயே வளர்த்துக் கொண்ட பிறகு 1980 களின் தொடக்கத்தில் வீரகேசரி ஊடாக பத்திரிகைத் துறையில் பிரவேசித்தார். வீரகேசரியில் முதலில் விளம்பரப் பிரிவில் லிகிதர் – மொழிபெயர்ப்பாளராக சிறிது காலம் கடமையாற்றிய பிறகு ஆசிரிய பீடத்தில் உதவியாசிரியராக நியமிக்கப்பட்டார். வெளிநாட்டுச் செய்திப் பிரிவிலும் உள்ளூர் செய்திப் பிரிவிலும் கணிசமான காலம் பணியாற்றிய பிறகு வீரகேசரி வாரவெளியீட்டுப் பிரிவுக்கும் மாற்றப்பட்டார். வாரவெளியீட்டில் அவர் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் திறனாய்வுத் துறைகளில் படைப்புக்களை எழுதுவதிலும் தெரிவு செய்வதிலும் சிறப்பான முறையில் பணிபுரிந்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவுஜீவிகளின் தரமான படைப்புக்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்தார். மொழிபெயர்த்து அவை வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமாவதற்கு அந்தக் காலகட்டத்தில் கேதாரநாதன் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கதாகும். மாற்றுச் சினிமாக்களையும் பிறமொழித் திரைப்படங்களையும் பற்றிய பரீட்சயத்தை தமிழ் வாசகர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு பங்களிப்புச் செய்த பத்திரிகையாளர்களில் கேதாரநாதனுக்குத் தனித்துவமான பங்குண்டு. கால்நூற்றாண்டு பத்திரிகைத் துறைச் சேவையிலிருந்து 2006 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒரு சுயாதீன ஊடகவியலாளராக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ்ச் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.புதன், ஜூலை 31

அஞ்சலி : எழுத்தாளர் கண.மகேஸ்வரன்    கரவெட்டி மண் தந்த ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவராகிய கண. மகேஸ்வரன் அவர்கள் 1968 இல் சிரித்திரனில் எழுதத் தொடங்கியவர். ஈழத்து இதழியற் துறைக்கு 1981- 1984 வரை “தாரகை” என்ற சஞ்சிகையின் மூலம் தனது காத்திரமான பங்களிப்பைத் தந்தவர். முதல் இரண்டு இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பின்னர் 3ஆவது இதழ் முதல் 12 ஆவது இதழ் வரை ஆசிரியராகவும் இருந்து ஈழத்தில் நாம் அறியக்கூடிய பல படைப்பாளிகளின் படைப்புக்களை வெளிக்கொண்டு வந்தவர்.

   அடிப்படையில் கண. மகேஸ்வரன் ஒரு சிறுகதை ஆசிரியர். அவரின் “எல்லை வேம்பு” (1994), “தீர்வு தேடும் நியாயங்கள்”(2016)ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் “மலரும் வாழ்வு”(1992) என்ற குறுங்காவியமும் நூலுருப் பெற்றுள்ளன. குறுங்கதைகள், கவிதைகள் ஆகியனவும் எழுதியுள்ளார். மிகப் பரவலாகக் கணிப்புப் பெற்ற “உயிர்ப்புகள்” தொகுப்பின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டவர். இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதியவர்.

கிராம வாழ்வின் பண்பாட்டுக் கோலங்களையும் மண்மணம் கமழும் சொல்லாட்சியையும் தனது கதைகளில் கொண்டு வந்தவர். சாதாரண மனிதர்களின் பாடுகளை தன் கதைகளில் அழகாகப் பதிவுசெய்தவர். பல சந்தர்ப்பங்களில் தன் எழுத்து முயற்சிகளுக்காகப் பாராட்டினைப் பெற்றுக்கொண்டவர். 2015 இல் வடமராட்சி கலாசார பேரவை “கலைஞான வாரிதி” விருதினை வழங்கிக் கௌரவித்தது. 2016 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான வடமாகாண விருதும் அவரது சிறுகதைத்தொகுப்புப் பெற்றுக்கொண்டது.
   தாரகை சஞ்சிகைகளும் அவரின் குறுங்காவியமும் சஞ்சிகை தொடர்பான வாய்மொழிப் பதிவும் 
http://aavanaham.org/islandora/object/noolaham%3A922?fbclid=IwAR04h_FdcNPDRkQorFw4w7EvuPs_F8IaCDnZlmV-54B4UUHJZetSu56D75c
 நூலக எண்ணிம வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88?fbclid=IwAR0m9fcUL9Mru9xKyfCrFzfWIxm-yZ0GD64inmMG8oRXCTbBIDtQGzzBzt0இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் பிரதேசம் பற்றியும் பிரதேசப் படைப்பாளிகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கும், மிகச் சாதாரண மாந்தர்கள் தம் வாழ்வில் கடந்து வந்த பாடுகளை அறிந்து கொள்வதற்கும் அன்னாரின் படைப்புக்கள் ஈழத்து இலக்கியப் புலத்தில் அதிகம் வாசிக்கப்படவேண்டும்.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.
25.07.2019

ஞாயிறு, ஜூலை 21

அல்வாயூர் கவிஞர் மு. செல்லையாவின் படைப்புகள்

தேடல் :1
அல்வாயூர் கவிஞர் மு. செல்லையாவின் படைப்புகள்

 அல்வாயூர் கவிஞர் மு.செல்லையாவின் தொகுப்பு முயற்சிக்கு நண்பர்களும் தரும் ஆதரவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. கவிஞர் அவர்கள் எழுதிய தனிக்கவிதைகளும் கட்டுரைகளும் ஏனையவையும் தற்போது அல்வாயூர் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் என்ற முதற்தொகுதியாக வரவுள்ளது. முகநூலில் விடுத்த வேண்டுகோள், தனியார் சேகரிப்பு மற்றும் எனது தேடல் மூலமும், நண்பர் செல்வதாஸின் தேடலின் மூலமும் அரிதான படைப்புக்களும் ஆவணங்களும் கிடைத்தவண்ணமுள்ளன.

 இன்னமும் கிடைக்கப்பெறாத பிரதிகள் 

1.  அல்வாய் வேவிலந்தை அம்மன் பதிகம். 
2.  வற்றாப்பளை அம்மன் துதி. 
3. கதிர்காமக் கந்தப்பெருமான் வேல்வெண்பா (2 செய்யுட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.) 
4.சுகாதார சுலோகங்களும் கும்மியும் (2 பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.)

 இன்னமும் கிடைக்கப்பெறாத பிரதிகளைப் பெறும் நோக்கத்தையும் இவ்விடத்தில் பதிவுசெய்யவிரும்புகிறோம்.

 சு.குணேஸ்வரன் &கே.எம் செல்வதாஸ் (தொகுப்பாளர்கள்)


அரிதான பிரதிகளைப் பாதுகாத்துத் தந்தவர்கள்: துன்னாலை மகேந்திரம் (வளர்பிறை – முதற்பதிப்பு – அட்டைமுகப்பு இல்லாமலே கிடைத்தது.) 
கலாமணி பரணீதரன் ( வளர்பிறை – முதற்பதிப்பு அட்டைமுகப்பு) 
அ. விஜயநாதன் ( தேசிய கீதம்) 

செல்லத்துரை சுதர்சன் ( பொலிகண்டி கந்தவனநாதர் தோத்திரக் காரிகை, ) 


 கலாபூஷணம் ம. கணேசலிங்கம் (புதிய வண்டுவிடுதூது – முதற்பதிப்பு) செல்லத்துரை சுதர்சன் ( கயரோகம், ) 

அல்வாயூர்க் கவிஞர்

அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் பிற்காலத் தோற்றத்துடன் கூடிய ஒரு புகைப்படம் இணையப்பக்கத்தில் முதல்முதலில் பகிரக் கிடைத்துள்ளது. மிக ஆர்வத்துடன் இதனைத் தேடித் தந்துதவிய கவிஞரின் பேரன் விவேகானந்தன் கவிச்செல்வனுக்கு அன்பும் நன்றியும்

ஞாயிறு, டிசம்பர் 11

பண்பாட்டுப் பாடல்கள் - ஒரு குறிப்பு- சு. குணேஸ்வரன்--------

எமது பிரதேசத்தில் வழங்கி வந்த சிறுவர் மற்றும் நாட்டார் பாடல் வகையைச் சார்ந்தபாடல்களில் சிலவற்றைத் தேவைகருதி சிறிய பிரசுரமாக செய்யவேண்டியிருந்தது. அதுவே ‘பண்பாட்டுப் பாடல்கள்’ என்ற நூலாகும்.

திருமதி இராசலட்சுமி இராசதுரை அவர்களின் முப்பத்தோராம் நினைவுநாளினை முன்னிட்டு குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் 28 பக்கங்கள் கொண்ட இச்சிறிய நூலை சு. குணேஸ்வரன் தொகுத்துள்ளார். அட்டை ஓவியம் கோ. கைலாசநாதனுடையது. இதழை தானாவிஷ்ணுவும் சு. சிவனேஸ்வரனும் அழகாக வடிவமைத்துள்ளனர். அன்னார் இராசலட்சுமி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை கலாபூஷணம் சி. சிவநேசன் எழுதியுள்ளார். வெளியீட்டுக் குறிப்பை அன்னாரின் பிள்ளைகளான இராஜிகுமார், செல்வனா, தர்சனா ஆகியோர் எழுதியுள்ளனர்.

இதில் சிறுவர் பாடல் மற்றும் நாட்டார் பாடல் வகையைச் சேர்ந்த 15 பாடல்கள் அடங்கியுள்ளன.

1. அம்மாவின் அன்பு – வித்துவான் க. வேந்தனார்
2. சட்டை – இ. நாகராஜன்
3. பறவைக்குஞ்சு - வித்துவான் க. வேந்தனார்
4. எறும்புகள் – எம்.ஸீ. எம். ஸுபைர்
5. பசுவும் கன்றும் – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
6. பவளக்கொடி – கல்லடி வேலுப்பிள்ளை
7. அம்மா சுட்ட தோசை – (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
8. மின்னி மின்னிப் பூச்சி - (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
9. பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம் – (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
10. சின்னக்குருவி – மஹாகவி (து. உருத்திரமூர்த்தி)
11. பூஞ்சோலை – கவிஞர் அல்வாயூர் மு.செல்லையா
12. கத்தரி வெருளி – நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
13. ஆடிப்பிறப்பு - நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
14. மீன்பிடிகாரர் பாடல் – (நாட்டார் பாடல் வகையைச் சார்ந்தது)
15. மழையே மழையே – நவாலியூர்க் கவிராயர்

சனி, மார்ச் 5

‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழாஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தியும், வெளியீட்டுரையை கோப்பாய் சிவமும், அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும், ஆய்வுரையை பேராசிரியர் துரை மனோகரனும் நிகழ்த்துவர். ஏற்புரையை செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்துவார். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் எஸ்.பி நாகரத்தினமும் இணைப்பிரதிகளை யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் பிரம்மஶ்ரீ க. இலட்சுமணசர்மாவும் பருத்தித்துறை பிரதேச செயலர் த. ஜெயசீலனும் யாழ் பொதுநூலக பிரதம நூலகர் திருமதி சுகந்தி சதாசிவமூர்த்தியும் பெற்றுக்கொள்வர். 1946 முதல் 1948 வரை வெளிவந்த 23 மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பாக அமையும் இந்நூல் கலை இலக்கிய வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது.