வெள்ளி, நவம்பர் 18

பா. அகிலனின் 'சரமகவிகள்' கவிதைநூல் வெளியீட்டு விழா
பா. அகிலனின் 'சரமகவிகள்' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து 3 கவிதைகள்


(தேர்வு எனது)
---


பிண இலக்கம் 182

சிதைவாடை
நீக்கினால்
ஓலமுறைந்து சீழ்கொண்ட இன்னோராடை

முலையொன்றில்லை
மறுமுலையில் கிடந்தது ஒரு சிறுவுடல்
பிரித்தால் பிரியாது
ஓருடலாய் ஒட்டிக்கிடந்தது

சுத்தப்படுத்திய பின் எழுதினேன்
பிண இலக்கம் 182

---

பொதி இலக்கம் 106 உம் பிறவும்

முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை

இரத்த வெடில்
சிதம்பியழுகிய உடலை தொடமுதல்
முறிந்தன என்புகள்

"குழந்தைகள் போலும்"

மூடையாய் கட்டிய பின்
ஓரமாய் குவிக்கத் தொடங்கினோம்.

---

விசரி

காயமேதும் இல்லை.

ஒற்றையாடையில் மலமும்
மாதவிடாய் இரத்தமும் ஊறிக்கிடக்க
மாற்றுடை மறுத்தாள்
ஊன் மறுத்தாள்
பகலையும், இரவையும் ஊடறுத்தலறினாள்

மகவே.
மகவே.
மாயமே.

துரத்தி
விலங்கிட்டுக் கட்டிய பின்
உள மருத்துவருக்கு சிபாரிசு செய்தோம்.

நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' வெளியீட்டு விழாவெள்ளி, நவம்பர் 4

து. குலசிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்பருத்தித்துறை பிரதேச செயலகம் நடாத்தும் 'வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா' சனிக்கிழமை பி.ப1.30 மணிக்கு இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில் பிரதேச கலாசாரப் பேரவையினர் 2011 ஆம் ஆண்டுக்கான கலைப்பிரதி விருதினை 5 பேருக்கு வழங்குகிறார்கள். அதில் எனது அன்புக்குரிய இலக்கிய உறவு இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களும் ஒருவர்.

யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற இலக்கிய நேசமுள்ள மனிதர்கள் சிலரில் குலசிங்கமும் ஒருவர். அவர் ஒரு படைப்பாளி அல்ல. தீவிரமான வாசகன், இலக்கியத்தை நேசிப்பவர். நல்ல இலக்கியப் புதினங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்.

வடமராட்சி போர்ச்சூழலுக்குள் முடங்கியிருந்தபோது அப்போதைய மக்களின் மனத்துயரங்கள் பற்றி தமிழகத்திலிருந்து வெளிவந்த காலச்சுவடு சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணலில் விரிவாகப் பேசியிருந்தார்.

ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் இலக்கியப் பொக்கிஷம், தனது சொந்தப் பணத்தை நல்ல நூல்களின் தேட்டமாக ஆக்கி வைத்துள்ளார். இவர் அவ்வப்போது எழுதிய கடிதங்கள் தமிழகப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கனடாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'காலம்' ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது.அது பின்னர் பிரான்சில் இருந்து வெளிவந்த 'உயிர்நிழல்' சஞ்சிகையிலும் வெளியாகியிருந்தது.

மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு நலப்பணிகளுக்கு விளம்பரமில்லாத வகையில் அடக்கமாக ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார். வாழ்வகம், அஞ்சலியகம் ஆகியவற்றின் சில நல்ல முயற்சிகளுக்கு உதவியிருக்கிறார்.

மிக முக்கியமான ஒரு பணியாக அண்மையில் வெளிவந்த கிரியா அகராதிக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. 1700 இலங்கைச் சொற்கள் அந்த அகராதியில் இடம்பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 'அறிவோர் கூடல்' என்ற இலக்கியம் சார் அமைப்பினூடாக நல்ல விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு களம் அமைத்து வருகிறார்.

அவரின் இந்தப் பணிகளுக்கு எல்லாம் உற்சாகத்தைக் கொடுப்பதாக இந்தக் கௌரவம் அமையும் என்று எண்ணுகிறேன். அண்ணன் குலசிங்கம் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சு. குணேஸ்வரன் (துவாரகன்)


உயிர்நிழல் ஒக்டோபர் 2011 இதழ் வெளிவந்துள்ளது.

புகலிடத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் உயிர்நிழலின் 34 வது இதழ் வெளிவந்துள்ளது.

இவ்விதழில் திருமாவளவன், ஆழியாள் ஆகியோரின் கவிதைகளும், உளநல மருத்துவர் எஸ் சிவதாசன் அவர்களுடனான நீண்ட உரையாடலும்; மீராபாரதி,ஜிஃப்றி ஹாஸன், கலையரசன், ஆகியோரின் அரசியற்கட்டுரைகளும்; தர்மசிறி பண்டாரநாயக்காவின் 'த ட்ராகன்' நாடகம் பற்றிய பார்வையும் (தொகுத்துத் தந்திருப்பவர் பா. துவாரகன்); மற்றும் பேராசிரியர் கா. சி பற்றிய எம். பௌசர் எழுதிய கட்டுரையும், புலம்பெயர் அமைப்புக்கள் பற்றி சிவலிங்கம் எழுதிய கட்டுரையுமாக இதழை அலங்கரிக்கின்றன.

நபீலின் கவிதைகள் பற்றி பஹீமாவின் கட்டுரையுடன் கடிதங்களும் இணைந்துள்ளன.

கனதியாக அமைந்திருக்கும் சில கட்டுரைகள் ஆழமான வாசிப்பைக் கோருவனவாக அமைந்துள்ளன.