ஞாயிறு, ஏப்ரல் 29

புதிய நூலகத்திற்கு எழுதுங்கள்





மின்னூல் திட்டத்தினூடாக வெளிவரும் 'புதிய நூலகம்' செய்திமடலுக்கு புனைவுசாரா படைப்புக்கள் பற்றி, ஆவணப்படுத்தல் பற்றி, ஈழச்சூழலில் இடம்பெறும் கலை இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் பற்றி எழுதுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். பொருத்தமானவை தகுதியானவை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும். படைப்புக்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 
kuneswaran@gmail.com
புதிய நூலகம் இதழ்களை இந்த இணைப்பினூடாகச் சென்று வாசிக்கலாம்

சனி, ஏப்ரல் 21

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் - அஞ்சலிக் குறிப்புகள் 


1. போய்வாரும் தோழரே -
நந்தினி சேவியர்

 “இருந்தாலும் அவர் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவர். என்பதைச் சொல்லியாக வேண்டும். பழைய மார்க்சீய, லெனினிய மா-ஓ-வோ சித்தாந்தவாதிகளுக்குமிடையே உள்ள பாசம் இன்னும் எங்களுக்கிடையே இருக்கிறது. எல்லோரையும்விட நான் ஒரு கம்யூனிஸ்டை ஒரு கம்யூனிஸ்ட் அனுதாபியை அதிகம் நேசிப்பேன். எல்லாவற்றையும் எல்லா வகையிலும் இழந்து சோர்ந்துபோன எனக்கு, இன்று பற்றுக்கோடாக இருப்பது பழைய தோழர்களின் பாசம்தான். அன்புடீனுக்கு புதிய சித்தாந்தங்கள் ஏதாவது இருந்தாலும் ஒரு பழைய தோழராகவே நான் அவரைப் பார்க்கிறேன். ஏன் பழைய தோழர் என்கிறேன்? எல்லாமே பொய்யாய், கனவாய், பழங்கதையாய் மெல்ல போயிற்றே அதனால்”

 மேற்குறித்த சசியின் வாக்குமூலம் அன்புடீனின் நெருப்புவாசல் சிறுகதைத் தொகுதிக்கு ‘விலகல்’ என்னும் தலைப்பில் எழுதிய முன்னுரையில் நான்காவது பந்தியாக அமைந்துள்ளது.

 ஏதோ ஒரு வகையில் எனக்கு உடன்பாடானவரான சசியின் ‘விலகல்’ முன்னுரையின் மேற்போந்த கூற்று என்னை ஒருகணம் திணறடித்தது உண்மை. எனக்கும் இன்று பற்றுக்கோடாக இருப்பது தோழர்களின் பாசம்தான்.

 பழைய தோழமையை பசுமை மாறாமல் பேணும் அவரது படைப்புகளை மீளவும் மீளவும் நான் நினைவு கூருவேன். சமீப நாட்களாக எனது உரையாடல்களில் சண்முகம் சிவலிங்கம் அடிக்கடி வந்து கொண்டிருந்தார்.

 அவரது ‘வெளியார் வருகை’ ‘ஆக்காண்டி’ முதலிய கவிதைகளும், ‘நீர்வளையங்கள்’ கவிதைத்தொகுதியும், தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் அதிர்ச்சியூட்டிய அவரது கவிதையும் நண்பர்களோடு அடிக்கடி பகிரப்பட்டுக் கொண்டிருந்தன.

 எனது ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ தொகுதியை அவருக்கு வழங்கவென நண்பர் வி. கௌரிபாலனுடன் பாண்டிருப்புக்குச் சென்றும் அது சாத்தியமாகவில்லை. உமா வரதராஜன் மூலம் அதனை அவரிடம் சேர்ப்பித்தேன். தனது இறுதிச்சந்திப்பு எனது தொகுதியை அவரிடம் சேர்ப்பித்தபோதே நிகழ்ந்ததாக உமா என்னிடம் கூறினார்.

 சசித்தோழரே நாம் இருவரும் நெருங்கிப் பழகவில்லைத்தான். ஆயினும் உம்மீதான எனது பிரியம் உமது இலக்கிய அரசியல் நோக்குக் காரணமானது. உமது கதைகளை, குறுநாவல்களை, கவிதைத்தொகுப்புகளை வாசிக்கத் தூண்டுதலே உம்மை நேசிக்கும் எனது வாசகக்கடமைகளில் ஒன்றெனக் கருதுகிறேன். போய் வாரும்.

 தோழமையுடன் 
 நந்தினி சேவியர்.



2. 


பாண்டிருப்பைச் சேர்ந்தவரும் , ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும் விமர்சகரும் சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் 

இன்று அதிகாலை மரணமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார்.

இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

'நீர்வளையங்கள்', 'சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்' என்ற சிறந்த இரண்டு கவிதைநூல்கள் மட்டும் இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகள் பலவற்றை எழுதிஉள்ளார் ; கவிஞர் மஹாகவியின் முக்கியத்தினை நிலைநிறுத்துவதில் இவரது கட்டுரைகள் கவிஞர் நுஹ்மானின் பணிகளுடன் துணைநின்றன!

இவரது கட்டுரைகளும் அழகிய சிறுகதைகள் பலவும் கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டியது அவசியம் ; அவை ஈழத்து இலக்கிய த்துக்கு வளம் சேர்ப்பவை!

-அ.யேசுராசா 
20.04.2012



3.

ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரான சண்முகம் சிவலிங்கத்தை இழந்து விட்டோம். 1960 களில் எழுதத் தொடங்கியதில் இருந்து தன்னுடைய இறுதிக் கவிதை வரையில் ஈர்ப்புக் குன்றாமல், புதுமை குன்றாமல் எழுதி வந்தவர் சசி. 

1939ம் ஆண்டில் பிறந்த சண்முகம் சிவலிங்கம் 1960 களில் எழுதத் தொடங்கியவர். 2012 வரையில் எழுதியவர். 

இதுவரையில் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன.

ஆனால், சண்முகம் சிவலிங்கம் எழுதிய சிறுகதைகள் எவையும் இன்னும் தொகுக்கப்படவில்லை. அவர் ஒரு நாவலை எழுதி வைத்திருந்ததாகவும் கேள்வி. 

இதைவிட, விமர்சனங்களையும் எழுதி வந்தார். 

இலங்கையின் கிழக்கே கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

இரவு படுக்கைக்குச் சென்றவர் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] 

காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்க் கவிதைக்குப் புதிய பரிமாணங்களைத் தந்து தனித்த அடையாளமாகத் துலங்கிய சண்முகம் சிவலிங்கத்தின் இழப்புப் பெரிதே.
-கருணாகரன்






4.

-----------
சசிக்கு
------------
சீரற்றுக் குலைந்த இதயத்தின் பெருந்துடிப்பு
மூன்றாம் யாமத்தில் என்னை எழுப்பியபோது
முகமும் நினைவும் வியர்வையில் நனைய
தலைமாட்டில் எப்போதும் இருக்கும்
நைட்ரோகிளிசரீனைப் பற்றுகிறேன்
அது சிவப்பு நிறம்
சசி,
உன்னுடையதும் சிவப்பு நிறமா?

நேற்றிரவு
தூரத்தில் இரைகிற கடல் இல்லை
வியப்பு இல்லை
பரல் கற்களின் மீது சொற்களற்றுப் புரண்டு செல்லும்
சிற்றாறு இல்லை

கலவி முடிந்த பின்
தூக்கத்தில் துவண்டிருக்கும் அவள் மீது
நீ வீசியெறிந்த சாரம்
கவிதைக்குள் ஒளிந்து விட்டது
மகனின் இருமல் நின்றுபோய்
நீண்ட நாளாகி விட்டது
அவனைக் கொண்டுபோன காற்றும் நெருப்பும்
உன் வாயிலுக்கு வராது

படையினர் மட்டுமே கேலிச் சிரிப்புடன்
அலையும் நடு இரவில்
மெல்லிய சாராய மணத்துடன்
தெருவில் இருந்து ஒழுங்கைக்குள் திரும்புகிறது
ஒரு சைக்கிள்
அதில் நீ இல்லை.

சேரன், 20-04-2012

( சண்முகம் சிவலிங்கம் (1939-2012)








5.

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தி திடுக்கிடும் வகையில் வந்த சேர்ந்தள்ளது. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் நமது காலத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அற்புதமான கவிஞர்@ படைப்பாற்றல் மிக்க கவித்துவமான மொழியில் அருமையான சிறுகதைகளைத் தந்த சிறுகதையாசிரியர்@ சிந்தனையைத் தூண்டும் ஆழமான கட்டுரைகளைத் தந்த சிந்தனையாளர். அவரது நூலுருவில் வெளிவராத படைப்புக்கள் இன்னமும் பல உள்ளன. அதிகமா...கப் பேசப்படாவிட்டாலும் சீரிய வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவரும் பெரும் மதிப்புக்குரியவராக திகழ்ந்தவருமான ஒரு அரிய படைப்பாளியை நாம் இன்று இழந்துவிட்டோம்.. அவரது அகால இழப்பு ஆழ்ந்த துயர் தரும் ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வாகும். ஈழத்தின நவீன கவிதைப் பாரம்பரியத்தின் இரண்டாந் தலைமுறைக் கவிஞர்களுள் ஆழமும் வீச்சும் கொண்ட ஒரு கவிஞராக தன்னை வெளிப்படுத்தியவர்அவர்;. ஈழத்தின் தமிழ் படைப்புலகின் தரத்திற்கு பெருமை சேர்த்த அவரது இழப்பை ஆழ்ந்த துயரத்தடன் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

எஸ். கே விக்கினேஸ்வரன்.