திங்கள், டிசம்பர் 23

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் ஜி.ரி. கேதாரநாதன்
     பத்திரிகைத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய ஜி.ரி கேதாரநாதன் நவீன இலக்கியம் குறித்த கட்டுரைகள், மாற்றுச் சினிமா, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில்இயங்கியவர். இவரின் பணியைப் பாராட்டி இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் 20 ஆவது சிறப்பு ஊடக விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவினால் அன்றையதினம் கல்கிசையில் நடைபெற்ற விருது விழாவில் அவரால் கலந்து கொள்ளமுடியாத நிலையில் அவரது சகோதரன் ஓவியர் கோ. கைலாசநாதன் அன்றைய தினம் அவர்சார்பாக அவ்விருதினைப் பெற்றுக்கொண்டார். கேதாரநாதன் எழுதிய சினிமா தொடர்பான கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் உள்ளடங்கிய நூல் ஒன்றும் விரைவில் வெளிவரவுள்ளது. அவரின் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜி.ரி கேதாரநாதன் குறித்த பத்திரிகைக் குறிப்பொன்று (தினக்குரல், 08.12.2019) பின்வருமாறு,

“யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த கோபாலபிள்ளை திருக்கேதாரநாதன் சிறு சஞ்சிகைகள் மூலமாக கலை இலக்கியத்துறையில் எழுத்து அனுபவத்தை பாடசாலை நாட்களிலேயே வளர்த்துக் கொண்ட பிறகு 1980 களின் தொடக்கத்தில் வீரகேசரி ஊடாக பத்திரிகைத் துறையில் பிரவேசித்தார். வீரகேசரியில் முதலில் விளம்பரப் பிரிவில் லிகிதர் – மொழிபெயர்ப்பாளராக சிறிது காலம் கடமையாற்றிய பிறகு ஆசிரிய பீடத்தில் உதவியாசிரியராக நியமிக்கப்பட்டார். வெளிநாட்டுச் செய்திப் பிரிவிலும் உள்ளூர் செய்திப் பிரிவிலும் கணிசமான காலம் பணியாற்றிய பிறகு வீரகேசரி வாரவெளியீட்டுப் பிரிவுக்கும் மாற்றப்பட்டார். வாரவெளியீட்டில் அவர் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் திறனாய்வுத் துறைகளில் படைப்புக்களை எழுதுவதிலும் தெரிவு செய்வதிலும் சிறப்பான முறையில் பணிபுரிந்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவுஜீவிகளின் தரமான படைப்புக்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்தார். மொழிபெயர்த்து அவை வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமாவதற்கு அந்தக் காலகட்டத்தில் கேதாரநாதன் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கதாகும். மாற்றுச் சினிமாக்களையும் பிறமொழித் திரைப்படங்களையும் பற்றிய பரீட்சயத்தை தமிழ் வாசகர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு பங்களிப்புச் செய்த பத்திரிகையாளர்களில் கேதாரநாதனுக்குத் தனித்துவமான பங்குண்டு. கால்நூற்றாண்டு பத்திரிகைத் துறைச் சேவையிலிருந்து 2006 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒரு சுயாதீன ஊடகவியலாளராக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ்ச் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக