புதன், ஜூலை 31

அஞ்சலி : எழுத்தாளர் கண.மகேஸ்வரன்



    கரவெட்டி மண் தந்த ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவராகிய கண. மகேஸ்வரன் அவர்கள் 1968 இல் சிரித்திரனில் எழுதத் தொடங்கியவர். ஈழத்து இதழியற் துறைக்கு 1981- 1984 வரை “தாரகை” என்ற சஞ்சிகையின் மூலம் தனது காத்திரமான பங்களிப்பைத் தந்தவர். முதல் இரண்டு இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பின்னர் 3ஆவது இதழ் முதல் 12 ஆவது இதழ் வரை ஆசிரியராகவும் இருந்து ஈழத்தில் நாம் அறியக்கூடிய பல படைப்பாளிகளின் படைப்புக்களை வெளிக்கொண்டு வந்தவர்.

   அடிப்படையில் கண. மகேஸ்வரன் ஒரு சிறுகதை ஆசிரியர். அவரின் “எல்லை வேம்பு” (1994), “தீர்வு தேடும் நியாயங்கள்”(2016)ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் “மலரும் வாழ்வு”(1992) என்ற குறுங்காவியமும் நூலுருப் பெற்றுள்ளன. குறுங்கதைகள், கவிதைகள் ஆகியனவும் எழுதியுள்ளார். மிகப் பரவலாகக் கணிப்புப் பெற்ற “உயிர்ப்புகள்” தொகுப்பின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டவர். இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதியவர்.

கிராம வாழ்வின் பண்பாட்டுக் கோலங்களையும் மண்மணம் கமழும் சொல்லாட்சியையும் தனது கதைகளில் கொண்டு வந்தவர். சாதாரண மனிதர்களின் பாடுகளை தன் கதைகளில் அழகாகப் பதிவுசெய்தவர். பல சந்தர்ப்பங்களில் தன் எழுத்து முயற்சிகளுக்காகப் பாராட்டினைப் பெற்றுக்கொண்டவர். 2015 இல் வடமராட்சி கலாசார பேரவை “கலைஞான வாரிதி” விருதினை வழங்கிக் கௌரவித்தது. 2016 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான வடமாகாண விருதும் அவரது சிறுகதைத்தொகுப்புப் பெற்றுக்கொண்டது.
   தாரகை சஞ்சிகைகளும் அவரின் குறுங்காவியமும் சஞ்சிகை தொடர்பான வாய்மொழிப் பதிவும் 
http://aavanaham.org/islandora/object/noolaham%3A922?fbclid=IwAR04h_FdcNPDRkQorFw4w7EvuPs_F8IaCDnZlmV-54B4UUHJZetSu56D75c
 நூலக எண்ணிம வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88?fbclid=IwAR0m9fcUL9Mru9xKyfCrFzfWIxm-yZ0GD64inmMG8oRXCTbBIDtQGzzBzt0இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் பிரதேசம் பற்றியும் பிரதேசப் படைப்பாளிகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கும், மிகச் சாதாரண மாந்தர்கள் தம் வாழ்வில் கடந்து வந்த பாடுகளை அறிந்து கொள்வதற்கும் அன்னாரின் படைப்புக்கள் ஈழத்து இலக்கியப் புலத்தில் அதிகம் வாசிக்கப்படவேண்டும்.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.
25.07.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக