வியாழன், ஆகஸ்ட் 28

கலைமுகம் இதழ் 58 (ஏப்ரல் யூன் 2014) வெளிவந்துள்ளது.



இந்த இதழில் ந. மயூரரூபன், சு. குணேஸ்வரன், பி. எஸ். அல்பிரட், மிதுலா, மேமன்கவி, தபின், பூ. சோதிநாதன் ஆகியோரின் கட்டுரைகளும்; யாழவன், குருதத், வே. ஐ. வரதராஜன், பாக்கியநாதன், மு.பொ, வேலணையூர் தாஸ், இராகவன், அலெக்ஸ் பரந்தாமன் ஆகியோரின் கவிதைகளும்; தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதையும் மற்றும் கந்தையா சிறீகணேசன், கோ. கேதாரநாதன், சோ. ப ஆகியோர் மொழிபெயர்த்த படைப்புக்களும் ;ந. சத்தியபாலன், இயல்வாணன், தரிசனன், வே.ஐ.வரதராஜன், செல்வதாஸ், சுரேஷ், நேசன், கெனத் ஆகியோரின் நூல் மதிப்பீடுகளும் உள்ளடங்கியுள்ளன.

வியாழன், ஜூலை 31

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுத்த சமூகப்போராளி தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களுக்கு அஞ்சலிகள்


சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுத்த சமூகப்போராளி தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின் தமிழ் வகுப்பில் சில நாள்கள் கற்ற நினைவும், அவர் நாட்டார் பாடலை அழகாகப் பாடிக்காட்டிய அழகும், அவர் இலக்கிய நிகழ்வுகளில் உரையாற்றிய கம்பீரத்தையும் சிறிது காலத்துக்கு முன்னர் அருகிருந்து அனுபவித்துள்ளேன்.

அன்னாரின் எழுத்துக்களும் உரைகளும் ஆவணப்படுத்தப்படவேண்டும்.
 அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.Subramaniam Kuneswaran shared Subramaniam Kuneswaran's photo.
Yesterday



முகநூல் மற்றும் இணையத் தளங்களில் பதிவுசெய்யப்பட்ட அஞ்சலிகளில் இருந்து....


ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ

தங்கவடிவேல் மாஸ்டர் இலங்கையில் மரணம் அடைந்தார். இலங்கை கம்யுனிச கட்சியின் மூத்த உறுப்பினராகவும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னோடி போராளியாகவும், வாழ்ந்த   தங்கவடிவேல் மாஸ்டர் மரணமடைந்தார்.அன்னாருக்கும் அவரது இழப்பில் துயருறும்  உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். http://www.unmaikal.com/2014/07/blog-post_35.html

 

Sutharsan Sellathurai எமதுஆசிரயருக்கு எமது அஞ்சலிகள். அமரிக்கன் மிஷனின் அற்புத மனிதருள் ஒருவர்
 Sutharsan Sellathurai 1கல்வித்துறைசார் நிலையங்களில் உள்ள சாதிவெறி நாய்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த எங்கள் ஆசிரியருக்கு எனது அஞ்சலிகள்


இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சண் பாதை) போராளியும் -

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க இணைச்செயலாளராகப் பணியாற்றியவரும் - கலை இலக்கிய நேசரும் - ஓய்வுபெற்ற ஆசிரியருமான தோழர் கே. தங்கவடிவேல் இலங்கையில் காலமானார்.

கடந்த சில வருடங்களாக லண்டனில் வசித்துவந்த இவர் அண்மையில் இலங்கை சென்றபோது நோய்வாய்ப்பட்டு கடந்த இரவு காலமாகிய துயரச்செய்தி கிடைத்துள்ளது.

தங்கவடிவேல் மாஸ்ரர் எனத் தோழமையுடன் அழைக்கப்பட்ட இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சண் பாதை) வடபகுதியில் நடாத்திய சகல போராட்டங்களிலும் பங்குகொண்டவர்.
கட்சி ஆதரவுடன் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் - ஆலயப் பிரவேச - தேநீர்க் கடைப் பிரவேச நடவடிக்கைகள் யாவற்றிலும் பங்களித்தவர்.
கலை இலக்கியம் குறித்துச் சரியான கண்ணோட்டத்தில் விமர்சனங்களை முன்வைத்து படைப்பாளிகளை நெறிப்படுத்தியவர்.
சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தவர்.
உடலாலும் உள்ளத்தாலும் உயர்ந்த தோழரின் இழப்பு கவலையளிக்கிறது...!

அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்..!
Thambirajah Elangovan shared Ramalingam Kugathasan's photo.
 

தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் காலமான செய்தி அறிந்த துயரம்

தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தின் பங்கு வரலாற்று முக்கித்துவம் வாய்ந்தது. மாவட்டபுர கந்தசுவாமி கோவில் நுழைவுப்போராட்டத்தின் பிரதான ஒழுங்கமைப்பாளராக திகழ்ந்தவர். தீண்டாமை ஒழிப்பு வெகுஜென இயக்கத்தின் சமூகப்போராளியாக செயல்பட்டபோதும், அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையுடனும் தனது உறவைப்பேணிவந்தவர். இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் வெளியீடான “தீண்டாமைக்கொடுமையும் தீமூண்ட நாட்களும்” எனும் நூல் வெளியீடு இலங்கையில் நடைபெற்றபோது கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர்.
எம்.சி. ஒரு சமூகப்போராளி என்ற எம்.சி. சுப்பிரமணியம் அவர்களின் வரலாற்றுப் பதிவும், இலங்கையில் சாதியமும் அதெற்கெதிரான போராட்டமும் எனும் நூல்களுக்கான அறிமுக-விமர்சன உரையாடல் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியால் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டபோது, அச்சந்திப்பிலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியவர்.
கடந்த யூன் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மகாசபையின் வருடாந்த சந்திப்பிலும் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் கலந்த கொண்டார். அதுவே அவரது இறுதியான சமூக செயல்பாடாக இருந்திருக்கும்.
தோழரின் மறைவின் துயரத்தால் வருந்தும் அனைத்து உறவுகளுக்கும், தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
Bookmark the permalink.


ஒரு தளராத உறுதிகொண்ட போராளி-தோழர் தங்கவடிவேல்

Details
Published on Wednesday, 30 July 2014 13:43
Written by ndpfront
Hits: 52

தரப்படுத்தல் கண்டு தனிநாடு கேட்டு ஆயுதத்தோடு கொதிந்தெழுந்த வடக்கிலே, தனிக்குவளை, சிரட்டையில் தேநீர், கிணற்றில் நீரைக் கூட வாளியால் மொள்ளக் கூடாது, உயர் சாதியினருக்கு முன்னால் தோளிலிருக்கும் சால்வையை மடித்து கமக்கட்டுக்குள் செருகியாக வேண்டும், விவசாயக் கூலிப் பெண்கள் மார்புகளை மறைக்க குறுக்குக்கட்டு அணிய வேண்டும், வள்ளியம்மை என்றோ அல்லது கந்தையா என்றோ பெற்ற குழந்தைக்கு பெயர் வைத்தால் வள்ளி என்றும் கந்தன் என்றும் சாதிக்குறியீட்டுக்காக பெயர்கள் மாற்றி பதியப்பட்டும், இன்ன இன்ன சாதி இன்ன இன்ன ஊர்களில் குறிச்சிகளில் என்றும், தப்பித்தவறி சாதிவிட்டு சாதி காதல் கொண்டால் கடலிலோ, குளத்திலோ கிணற்றிலோ அடித்தே கொலை செய்து வீசப்பட்டு, வழக்குகள் நீதிமன்றுகளில் அப்புக்காத்துக்களால் தள்ளுபடியாக்கப்பட்டும், ஆலயங்களும் அங்கு குடிகொண்டிருக்கும் கடவுளர்கள் கூட சாதிகளுக்கென்றும், பள்ளிக்கூடங்களில் நீ பள்ளனா பறையனா என்றும், முத்தன், கந்தன் என்ற பெயரைக் கண்டால் மூட்டை சுமக்கப் போகாமல் நீ எதற்கடா வகுப்பறையில் முன் வாங்கில் அமர வேண்டும் என பாடம் நடாத்தும் சாதித்துவேசம் மிக்க «முத்துக்குமார சாமி» வாத்தியாயர்கள் என இன்னும் பற்பல சாதிக்கொடுமைகளை ஒடுக்குமுறைகளை தமிழ்த் தேசிய சாதிமான்கள் தங்கள் புறங்காலால் ஒதுக்கிவிட்டு தங்களது தங்கப் பிள்ளைகளின் பல்கலைக்கழக வாய்ப்பு பறிபோய் விட்டதே என்று வெண்கலக் குரல்களில் வீராவேச வசனம் பேசி அணிகளைத் திரட்டி ஆயுதப் போரினை மூட்டினர்.
அவ் வழிவந்தவர்கள் தலைமுறையில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் மட்டுமே இன்று வீர புருஷர்களாகவும், மாவீரர்களாகவும், போராளிகளாகவும் வரலாற்றில் தனித்து முன்னிறுத்தப்படுகின்றனர். இவர்கள் எல்லாம் தமிழ்த் தேசிய வீரர்களாக மலர முன்னரே தமதன்னையரில் கருவில் உருக்கொள்ள முன்னரே, நவீன போர்க்கருவிகளோடு துப்பாக்கிகளோடு, நவீன தகவல் பரிமாற்ற சாதனங்களோடு, பணபல, ஊடகப் பராக்கிரமங்களோடு நிலம் நடுங்க, உயிர்கள் இழிய நீண்ட போர் நடாத்துவதற்கு முன்னரே «தமிழர்» என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சண்டாளப் பேயாக தாண்டவமாடிய சாதியடிமை, குடிமை முறை, தீண்டாமை ஒடுக்குமுறையின் வேருக்கு வெடிகுண்டு வைத்தவர்கள். கரந்தடித்தல் என்னும் கெரில்லா போர்முறைக்கு «தமிழர்கள்» வரமுன்னரே வீதிகளில் தத்துவப் பதாகைகளோடு உயிர்களை நேரிடை மோதல்களில் விட்டெறிய வந்தவர்கள். வாள்களும் உள்ளுர் வெடிகுண்டுகளும் ஒரு சில நாட்டுத் துப்பாக்கிகளும் தவிர வேறு எந்த நவீனங்களும் அவர்களிடம் இல்லை, நெஞ்சில் ஏந்திய விடுதலை வேட்கையைத் தவிர.
மாலைகளையும், மலர்வளையங்களையும், மேளதாள தேர்தல் வெற்றி ஊர்வலங்களையும், வீராவேசப் பேச்சுகளில் சூடேறிய இளைஞர்களின் இரத்தத்தில் நெற்றித் திலகங்களையும் சூடிக்கொண்டோர்களுக்கிடையில், இனமானத் தலைவர்களாக தூக்கி உயர்த்தப்பட்டவர்களுக்கிடையில், அவமதிப்பையும் அடக்குமுறையையும், அநீதிகளையும், புறக்கணிப்புகளையும் வறுமையையும், தலைமறைவு வாழ்க்கையையும், தியாகங்களையும், போராட்ட அனுபவங்களால் புடம் போடப்பட்ட வரலாற்று நினைவுகளையும் தாங்கி நின்ற எத்தனையோ தோழர்களில் பலர் தமிழ்த்தேசிய ஆயுதப் போராட்டத்தலைமைகளால் நெஞ்சில் துவக்குமுனையால் எதிர்கொள்ளப்பட்டனர். எனினும் எதைக் கண்டும் துவண்டு விடாத அவர்களது நீண்டதும் நெடியதுமான போராட்டமும் அதன் பயனாய் விளைந்த சமூகத்தில் பொது இடங்களிலாவது ஓரளவுக்கு தன்னை நாகரீகமாக மறைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு யாழ் சாதியமுறைமை தன்னை இனங்காட்டாமல் இனமானப் போர்வையைப் போர்த்துக் கொண்டுள்ளது.
போராளிகள் என்ற பதம் தமிழ்த்தேசியத்தால் உச்சரிக்கப்படுமுன்னரே அடிப்படை மனிதத்துக்கு எதிரான அநீதி கண்டு கொதித்தெழுந்து முதல் மூத்த தலைமுறைப் போராளிகளாக, எழுத்தாளர்களாக தத்துவார்த்த பிரச்சாரகர்களாக எனப் பலமுனையிலும் முறுக்கிய தம்கரங்களையும் முன்னேறிய மார்க்சிய தத்துவத்தின் வெளிச்சத்தினையும் மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டு சமூகத்தின் முன்னின்றவர்கள் இவர்களே தவிர தேசியம் என்ற பெயரில் ஏகாதிபத்திய அடிமைகளாகவும் ஏவல் நாய்களாகவும் துப்பாக்கி ஏந்திய தலைமைகள் அல்ல.
தீண்டாமை வெகுஜன இயக்கம், சாதியம், தீண்டாமைக்கெதிராக மக்களைப் போராளிகளாக்கியது. மக்களை பாரிய இயக்கமாக்கியது. வேண்டப்பட்ட போது அவர்களை ஆயுதம் தரிக்க வைத்தது. தனிக்குவளைகளை தூக்கி வீசியது. ஆலயங்களில் உள்ளிட போராடியது. பல்வேறு சமூக கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக உயர்சாதி மக்களிடையிலும் தனது ஆதரவை பெற்றுக் கொண்டு ஓரணியில் போராட்டங்களில் இணைத்து உறுதியான இடைவிடாத போராட்டங்களை நிகழ்த்தியது.
மறுபுறத்தில் அதிகார மட்டத்தில் அரசியல் மட்டத்தில் சாதிப் பெரியோர்களை ஆக்ரோசமாக சாடி போர்க்கொடியோடு போராடியது. இத் தீண்டாமை இயக்கத்தின் தீரமிக்க போராளிகளில் ஒருவராக தன்னை அர்ப்பணித்தவர் தான் தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர்.

"தம்பிகளா ஒடுக்குமுறையென்ற சமுத்திரத்தின் மேல் கப்பல் கட்டி மிதந்துகொண்டு போராடுகின்றவர்களுக்கு, அச் சமுத்திரத்தின் மூச்சிழுக்க முடியாத அடியாழத்தில் மேலுள்ள சமுத்திர நீரின் அமுக்கத்தையும் அதிகமாக சுமந்து கொண்டு போராடுகின்றவர்களை காணமுடியாது தான். பலவிதமான சோர்வுகள், அவமதிப்புக்கள், அவதூறுகள், ஒதுக்கிவைத்தல், முரண்பாடுகள், அமைப்புத் தோழர்களின் தத்துவார்த்த நடைமுறை விலகல்கள், உயிராபத்து, அச்சுறுத்தல், குடும்பம் சுற்றங்கள் உறவுகளுக்கு கூட வேண்டாதவர்களாதல் என்ற பல இடர்ப்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருங்கள்" என்பது அவருடனான முதல் சந்திப்பில் அவர் புதிய ஜனநாயக மக்கள் முன்னணித் தோழர்களோடு கலந்துகொண்ட வார்த்தைகள். தன்னுடைய வயோதிபத்தின் வாசலுக்கு வந்தபின்னரும் மிகுந்த உற்சாகத்தோடு அவர் கலந்துரையாடல்களிலும் அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்ட அவர் ஒரு தளராத உறுதிகொண்ட போராளி என்பதை பதிவு செய்கிறோம். ஆனால் அவருடன் தொடர்ச்சியாக உரையாடுவதற்கென ஏற்படுத்திக் கொண்ட நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவருடைய அனுபவத்தை தொகுக்கு முன்னரே அவர் காலமாகிவிட்டதென்பது ஒரு பேரிழப்பு.

தோழர் தங்கவடிவேல் மாஸ்ரருக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது செவ்வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
30.07.2014






Thayaparan Thaya நான் சிறுவனாக இருந்த காலத்தில் மாலை வேளைகளில் எனது வீட்டிற்கு வந்து அப்பாவுடன் கதைத்து கொண்டிருப்பார் . கதைப்பது அரசியல் என்பது மட்டும் அப்போது விளங்கியிருந்தது . மிக கம்பீரமாக இருப்பார் .அம்மாவிடம் ஆர் அவர் என்று கேட்டேன் . கம்பர்மலை தங்கவடிவேல் மாஸ்டர் என்ன்றார் .அப்பாவின் நல்ல நண்பர்களில் ஒருவர் . அவர் டென்மார்க் அல்லது நோர்வேயில் இருப்பதாக நினைத்து கொண்டிருந்தேன் . லண்டனில் இருந்துருக்கிறார் ,சாதியம்,அரசியல் அல்லாவிடினும் அப்பாவின் நினைவுகளை மீட்பதற்காகவேணும் அவரை சந்தித்து இருக்கலாம் . தவறவிட்டுவிட்டேன் .
7 hrs · Like · 2


ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒன்று ஓய்ந்தது!

இலங்கையின்   இடது சாரி  இயக்க  வரலாற்றில்  வட பகுதியில்  தடம் பதித்த  தலைவைர்களில்  ஒருவரான  தங்கவடிவேல்  மாஸ்டர்  அவர்கள்  காலமாகிவிட்டார்.

இவர்  வடமராட்சி   கம்பர்  மலையை  சொந்த  இடமாக  கொண்டவர்.

வாழும்  காலம்  வரை  தான்  கொண்டிருந்த  இடதுசாரி  இயக்க  கோட்பாட்டில்  உறுதியாக  இருந்தவர்.

இவருக்கு  யாழ் நாதம்  இறுதி  மரியாதை  செலுத்துகிறது. 





• தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!
மாக்சிய லெனியமாவோயிச சிந்தனையின் வழிகாட்டலில் புதியஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்த தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் நேற்று (29.07.2014) காலமானார். யாழ்ப்பாணம் வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து புரட்சிப் பணியாற்றினார்.
தோழர் சண்முகதாசன் தலைமையின் வழிகாட்டலில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள். அந்த வரலாற்றை சொல்லக்கூடியவர் என தோழர் டானியல் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.
அவர் லண்டனுக்கு வநதபோது அவரை நான் முதன் முதலாக சந்தித்தேன். “தேசம்” சார்பாக தயாரிக்கப்பட்ட தோழர் சண் குறித்த ஆவணப்படத்திற்கு அவருடைய கருத்துகளை இணைப்பதற்காக அவரை நானும் பி.பி.சி தமிழோசை அறிவிப்பாளர் சீவகன் அவர்களும் சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சியுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதுமட்டுமல்ல தோழர் சண் எழுதிய புத்தக வெளியீட்டிலும் பங்கு பற்றி தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தார்.
கீழ்வரும் இணைப்பில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண் அவர்களின் புத்தக வெளியீட்டில் ஆற்றிய உரையை கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc&feature=youtu.be
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும்போதே “துப்பாக்கியின் நிழலில் சாதீயம் உறங்கிறது” என்று உண்மையை தைரியமாக கூறியவர். தனது கருத்துகளை எப்போதும் தயக்கமின்றி கூறுபவர். இறுதிவரை தன் கொள்கைகளில் இருந்து வழுவாமல் உறுதியுடன் வாழ்ந்தவர்.
இலங்கை புரட்சிவரலாற்றில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் பெயரும் பங்களிப்பும் நிச்சயம் இடம்பெறும். அவருடைய நினைவாக புதியஜனநாயகப் புரட்சியை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.